2018-05-15 15:26:00

வருங்காலத்தின் நம்பிக்கையாகிய குடும்பத்திற்காக செபம்


மே,15,2018. குடும்பம், வருங்காலத்தின் நம்பிக்கை. கடும் இன்னல்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு, நம் ஆண்டவர் உதவுமாறு சிறப்பாகச் செபிப்போம் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மே 15, இச்செவ்வாய் முதல், மூன்று நாள்களுக்கு, சிலே நாட்டு ஆயர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானிலுள்ள அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள ஓர் அறையில் இடம்பெறும் கலந்துரையாடலில், சிலே நாட்டின் 31 ஆயர்கள் மற்றும் துணை ஆயர்களும், மூன்று ஓய்வுபெற்ற ஆயர்களும் கலந்து கொள்கின்றனர்.

தென் அமெரிக்க நாடான சிலேயில், அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் குறித்து இடம்பெறும் இந்த மூன்று நாள் கலந்துரையாடல் பற்றி, செய்தியாளர் கூட்டத்தில் இத்திங்களன்று பேசிய இரு சிலே ஆயர்கள், திருஅவையில் இடம்பெறும் தவறான பாலியல் நடவடிக்கைகளை ஒழிப்பது குறித்து திருத்தந்தை கூறவிருக்கும் கருத்துக்களுக்குச் செவிமடுத்து, அவற்றை ஒழிப்பதற்குத் தயாராய் இருப்பதாகத் தெரிவித்தனர்.

அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை மற்றும், இவற்றை ஒழிப்பது குறித்த நடவடிக்கைகளை ஆயர்கள் ஏற்கனவே எடுத்துள்ளதாக சிலே ஆயர்கள் தெரிவித்தனர்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.