2018-05-14 15:36:00

இமயமாகும் இளமை – ஏழைத் தாயை மகிழ்ச்சிப்படுத்திய மகன்


'அம்மா, நான் படித்து கலெக்டர் ஆகிடுவேன். அப்புறம் நீ கீற்று பின்னி கஷ்டப்பட வேண்டாம் என என் மகன் படிக்கும்போது சொல்லிக் கொண்டிருப்பான். சொன்னது போலவே செய்துவிட்டான்’ என தன் மகனை நினைத்து பெருமிதமடைகிறார், கீற்று பின்னும் கூலித் தொழிலாளி தாய் ஒருவர். இந்திய ஆட்சியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தமிழகத்தில் மாநில அளவில் 3வது இடம் பிடித்து ஐஏஎஸ்-ஆகத் தேர்ச்சி அடைந்துள்ள சிவ குருபிரபாகரன் என்பவர்தான் இந்த மகன். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேலஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் குடும்பத்தில் தாய், தந்தை, பாட்டி போன்ற அனைவருக்கும் தொழில், தென்னங்கீற்று பின்னி விற்பது. அந்த வேலை இல்லாத நாட்களில் மரமில்லில் கூலிக்கு வேலை செய்வார்கள். மேலும், போதிய வருமானம் இல்லாததால் மாடு வளர்த்து பால் கறந்து, அதை விற்றும் பிழைப்பு நடத்தியுள்ளனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பத்தில் பிறந்த சிவகுருபிரபாகரன், தொடக்கப்பள்ளி படிப்பை அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், 6ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை அருகில் உள்ள புனவாசல் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலும் படித்தார். தொடர்ந்து புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பட்டய படிப்பு முடித்துவிட்டு, சிவில் இன்ஜினியரிங் படிப்பை, வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் சென்னை ஐ.ஐ.டியில் எம்.டெக் படித்த இவர், தொடர்ந்து போட்டித் தேர்வுகள் எழுதியதால் இரயில்வேயில் பணி கிடைத்தது. அப்போது, இந்த பணியே போதும் என்று அவரது உறவினர்களும், நண்பர்களும் சொல்லியிருக்கின்றனர். இருந்தபோதும், 'என் கனவு கலெக்டர் ஆவது. என் அம்மாவிடம் நான் சொன்னதை நிறைவேற்றும்வரை ஓயமாட்டேன்’ என சொல்லி தொடர்ந்து படித்தார். இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி, மாநில அளவில் மூன்றாவது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார், சிவ குருபிரபாகரன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.