2018-05-11 16:03:00

திருஅவைக்கு களங்கம் வருவிக்கின்ற போலிக் கடிதத்திற்கு கண்டனம்


மே,11,2018. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் மதமாற்றங்களை நடத்துவதற்கு, இந்தியத் திருஅவை திருப்பீடத்துடன் சேர்ந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று வெளியிடப்பட்டுள்ள கடிதம், தீயநோக்கம் கொண்ட போலி கடிதம் என்று சொல்லி, அக்கடிதத்திற்கு எதிரான தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது, தலத்திருஅவை.

இப்போலிக் கடிதம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள், இப்போலிக் கடிதம், கத்தோலிக்கத் திருஅவையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்,

மே 12, இச்சனிக்கிழமையன்று கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ளவேளை, அரசியல் இலாப நோக்குடன் வகுப்புவாத பதட்டநிலையை உருவாக்கும் நோக்கத்தையும், இக்கடிதம் கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார், ஆயர் மஸ்கரீனஸ்.

இப்போலிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, இந்திய ஆயர் பேரவையோ, கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்களோ, பிரிவினைகளை ஏற்படுத்தும் இத்தகைய யுக்திகளில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள் என்றும், ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், பெங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ் அவர்களுக்கு எழுதியதாக, இந்தப் போலிக் கடிதம் கூறுகிறது. இக்கடிதத்தில், மொழிப் பிழைகள் உள்ளன. மேலும், நபர்களின் பெயர்களும் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.