2018-05-11 15:44:00

தாய்வானில் திருத்தூதுப்பயணம் - திருத்தந்தைக்கு அழைப்பு


மே,11,2018. இதுவரை எந்த ஒரு திருத்தந்தையும் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளாத தாய்வான் நாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அழைப்பதற்கு விரும்புவதாக,  தாய்பேய் பேராயர் John Hung Shan-chuan அவர்கள் கூறினார்.

அத் லிமினா சந்திப்பை முன்னிட்டு தாய்வான் நாட்டின் ஆறு ஆயர்களுடன் உரோம் வந்துள்ள தாய்பேய் பேராயர் Hung அவர்கள் ஆசியச் செய்திக்கு அளித்த பேட்டியில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில், தாய்வான் நாட்டில் தேசிய திருநற்கருணை மாநாடு நடைபெறும் சமயத்தில், திருத்தந்தை திருத்தூதுப்பயணம் மேற்கொள்வது நல்ல தருணமாக அமையும் என்று கூறினார்.

சீனாவும், தாய்வானும் இருவேறு திருஅவைகள், இரு வேறு நாடுகள் மற்றும் இருவேறு வாழ்க்கைமுறையைக் கொண்டுள்ளன என்றும், சீனாவைச் சேர்ந்த 300 அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும், தாய்வானின் Furen கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் படிக்கின்றனர் என்றும், பேராயர் Hung அவர்கள் கூறினார்.

கத்தோலிக்கர், ஏறத்தாழ கடந்த முப்பது ஆண்டுகளாகத்தான், தாய்வான் மக்கள் மத்தியில் நேரடியாக மறைப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் குறிப்பிட்டார், பேராயர் Hung.

அத் லிமினா சந்திப்பையொட்டி, மே 14, வருகிற திங்களன்று, தாய்வான் நாட்டின் ஆயர்கள், திருத்தந்தையை சந்திக்கவுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.