2018-05-09 15:30:00

15வதுஉலக ஆயர்கள் மாமன்ற தயாரிப்பு கூட்டம் குறித்து..


மே,09,2018. உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலகத்தின் 14வது அவையின் நான்காவது கூட்டம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், இத்திங்கள், இச்செவ்வாய் (மே 7,8) ஆகிய இரு நாள்களில் நடைபெற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய, உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர், கர்தினால் லொரென்சோ பால்திசேரி அவர்கள், திருத்தந்தை இக்கூட்டத்தில் கலந்துகொண்டதற்கு முதலில் நன்றி தெரிவித்தார். பின்னர், இளையோர் பற்றிய 15வது உலக ஆயர் மாமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்குரிய Instrumentum laboris எனப்படும் நடைமுறை ஏட்டின் தயாரிப்பு குறித்து விளக்கினார், கர்தினால் பால்திசேரி.

இளையோர் நிலைமை குறித்து 2017ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கின் நடைமுறைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து பெற்ற கருத்துக்கள், 2018ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற, ஆயர்கள் மாமன்ற முன்தாயாரிப்பு கூட்டம் போன்றவற்றையும் எடுத்துரைத்தார், கர்தினால் பால்திசேரி.

இளையோர், விசுவாசம், அழைத்தலைத் தேர்ந்து தெளிதல் என்ற தலைப்பில் 15வது உலக ஆயர்கள் மாமன்றம், வத்திக்கானில், வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும். இம்மான்றம், 16 முதல் 29 வயதுக்குட்பட்ட இளையோர் குறித்து கவனம் செலுத்தும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.