2018-05-07 14:14:00

இமயமாகும் இளமை – சவால்களே வாய்ப்புகள்


நான் சந்தித்த சவால்களே என் வாழ்வுக்கு வாய்ப்புக்களாக அமைந்தன, என்கிறார், மாற்றுத்திறனாளியான ஸ்ரீகாந்த் பொல்லா(Srikanth Bolla). ஆந்திர மாநிலத்தின் சீதாராமபுரம் என்ற கிராமத்தில், வறிய விவசாயக் குடும்பத்தில், 1992ம் ஆண்டு, கண்பார்வையின்றி பிறந்த இவர், தற்போது, ஹைதராபாத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பற்ற (Eco-friendly) பேக்கேஜிங் பொருட்களைத் தயார் செய்யும் பொல்லான்ட் (Bollant Industries)  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO). இவர், தற்போது தனது நிறுவனத்தில் எழுபது விழுக்காட்டினருக்குமேல் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கி தனது நிறுவனத்தை நிமிர்ந்து நிற்கச் செய்து, வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஏறத்தாழ ஐம்பது கோடிக்கு முதலாளியான இவருக்கு இந்தியாவில் நான்கு மாநிலங்களின் நான்கு முக்கிய நகரங்களில் உற்பத்திக் கூடங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று முழுக்க முழுக்க சூரிய மின்சக்தியில் இயங்கும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு ஏப்ரலில் Forbes இதழ், இவரை, ஆசியாவில் இளம் செல்வந்தர்கள் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்தியது. அவ்வாண்டில் இந்தப் பட்டியலில் மூன்று இந்தியர்களே இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலகில் தன்னையே பெரும் பேறுபெற்றவராகக் கருதும் ஸ்ரீகாந்த் பொல்லா அவர்கள், தான் இப்போது கோடீஸ்வரன் என்பதால் அல்ல, மாதம் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்த நிலையிலும், தன்னை அன்புடன் வளர்த்து ஆளாக்கிய எழுதப் படிக்கத் தெரியாத தன் பெற்றோர்களை நினைத்து என்கிறார். இந்த உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் என் பெற்றோர்கள்தான் என்கிறார் இவர். ஸ்ரீகாந்த் பொல்லா அவர்கள், பார்வையற்ற குழந்தையாகப் பிறந்தபோது, அக்கம் பக்கத்தினர் அவரின் பெற்றோரிடம், இவனை வளர்த்து, அவனைக் கஷ்டப்படுத்தி, நீங்களும் கஷ்டப்படுவதைவிட, அவனை இப்போதே கொன்றுவிடுங்கள்", "அவனால் உங்களுக்கு என்ன பயன்? அவன் பாவம் செஞ்சிருக்கான். அதனால்தான் கண்பார்வையின்றி பிறந்திருக்கான்" என்றெல்லாம் கூறினார்களாம். ஆனால் பிறந்து,  இருபத்து மூன்று ஆண்டுகள் சென்று, உலகமே வியந்து பாராட்டும் விதத்தில் உயர்ந்து நிற்கும் ஸ்ரீகாந்த் அவர்கள், "உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று இந்த உலகம் என்னிடம் சொன்னால், இல்லை என்னால் எதுவும் முடியும் என்று திருப்பி சொல்வேன்" என்கிறார் தன்னம்பிக்கையுடன். செல்வம் என்பது பணத்திலிருந்து வருவதல்ல. அது மகிழ்ச்சியிலிருந்து வருவது என்று சொல்கிறார் ஸ்ரீகாந்த் பொல்லா.

ஆதாரம் : Agencies/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.