2018-05-05 16:15:00

நிலைமைகள் அனுமதித்தால் திருத்தந்தை சிரியாவுக்குச் செல்வார்


மே,05,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்குச் சாதகமான சூழல்கள் அமைந்தால், உடனடியாக அவர் அந்நாட்டிற்குச் செல்வார் என, திருப்பீட கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர், கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள் தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஜூலை 7ம் தேதி இத்தாலியின் பாரி நகருக்குச் சென்று, பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களுடன், மத்திய கிழக்கில் அமைதிக்காகச் செபிக்கவிருப்பதையொட்டி, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, கர்தினால் சாந்த்ரி அவர்கள், திருத்தந்தை சிரியா செல்வதற்குப் பயப்படவில்லை என்று கூறினார்.

திருத்தந்தை, சிரியா செல்லும்போது, தனது பாதுகாப்பை அல்ல, ஆனால் அச்சமயத்தில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் மக்களின் பாதுகாப்பு குறித்தே கவலையடைகிறார் என்றும், சிரியா சென்று மக்களைச் சந்திக்காமல் திரும்புவது சரியாக இருக்காது என்றும் தெரிவித்தார், கர்தினால் சாந்த்ரி.

புனித நிக்கோலஸ் அவர்களின் புனித நினைவுப்பொருள்கள் வைக்கப்பட்டுள்ள பாரிக்கு, ஜூலை 7ம் தேதி செல்லும் திருத்தந்தை, மத்தியக் கிழக்குப் பகுதியின் நிலவரங்கள் குறித்த ஆலோசனைகளையும், செபங்களையும், ஏனைய கிறிஸ்தவ சபைத் தலைவர்களுடன் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இத்தாலியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாரி நகரம், 'கீழை வழிபாட்டு முறை சகோதரர்களைச் சந்திக்கும் ஒரு சன்னல்' என்றும், அங்கு வணங்கப்பட்டுவரும் புனித நிக்கோலஸ், கீழை வழிபாட்டு முறை சகோதரர்களால், குறிப்பாக, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சகோதரர்களால் பெரிதும் போற்றப்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கன.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.