2018-05-04 15:33:00

புலம்பெயர்ந்தோரை வரவேற்று பாதுகாப்பதில் சமய நிறுவனங்கள்


மே.02,2018. குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோரை வரவேற்று, பாதுகாத்து, ஊக்குவித்து, அம்மக்களை சமூகத்தோடு ஒருங்கிணைப்பது, மதம் சார்ந்த நிறுவனங்களின் பணியில் முக்கியமானது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில், திருப்பீடமும், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கூட்டம் ஒன்றில், இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

“குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோரின் பயணத்தைப் பகிர்தல்: உலகளாவிய தாக்கத்தில் பல்சமயக் கூறு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய  பேராயர் அவுசா அவர்கள், குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோரை வரவேற்று, பாதுகாத்து, ஊக்குவித்து, அவர்களை ஒருங்கிணைப்பதன் வழியாக, மதங்கள் அவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைக் காட்ட வேண்டுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதை நினைவுபடுத்தினார்.

பொருளாதார மற்றும் அரசியல் ஆதாயங்களை நோக்காமல், இம்மக்கள் ஒவ்வொருவரின் மனித மாண்பு மீது கவனம் செலுத்துகையில், அவர்கள் உண்மையிலேயே வரவேற்று பாதுகாக்கப்படுவார்கள் என்ற, திருத்தந்தையின் கருத்தையும் எடுத்துரைத்தார், பேராயர் அவுசா.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.