2018-05-04 15:38:00

உத்தர்காண்ட் மதமாற்றத் தடைச் சட்டம் குறித்து கிறிஸ்தவர்கள்


மே.02,2018. இந்தியாவின் உத்தர்காண்ட் மாநிலத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டம், தங்களின் மறைப்பணியைப் பாதிக்காது என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார், அம்மாநிலத்தின் கத்தோலிக்க ஆயர் ஒருவர்.

உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள பரெய்லி மறைமாவட்ட ஆயர் இக்னேஷியஸ் டி சூசா (Ignatius D'Souza of Bareilly) அவர்கள், மதமாற்ற தடைச் சட்டம் குறித்து யூக்கா செய்தியிடம் பேசுகையில், பல ஆண்டுகளாக, மக்கள் மத்தியில் பிறரன்புப் பணிகளையும், போதகப் பணியையும் ஆற்றி வருகின்றோம் என்றும், இதுவரை தங்களுக்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்பட்டது கிடையாது என்றும் கூறினார்.

உத்தர்காண்ட் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டம், வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு எதிரானது, ஆனால் இத்தகைய மதமாற்றங்கள் கத்தோலிக்கத் திருஅவையில் இடம்பெறுவது இல்லை என்றும், ஆயர் இக்னேஷியஸ் டி சூசா அவர்கள் தெரிவித்தார்.

மேலும், மீரட் ஆயர் Francis Kalist அவர்கள் கூறுகையில், உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள   கிறிஸ்தவர்கள், இதுவரை எந்தக் குழுவிடமிருந்தும் எந்தவித கடும் காழ்ப்புணர்வுகளை எதிர்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

உத்தர்காண்ட், இந்தியாவில் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்துள்ள ஏழாவது மாநிலமாகும்.  மேலும், ஆறு வட இந்திய மாநிலங்களைக் கடுமையாய்த் தாக்கியுள்ள புழுதிப் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை நிறுவனங்கள் முழுவீச்சுடன் உதவி வருகின்றன.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.