2018-05-03 15:33:00

கொரிய தீபகற்பத்தில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது


மே.03,2018. இரு கொரிய அரசுத்தலைவர்களும் Panmunjom நகரில் வெளியிட்ட இணை அறிக்கை, இவ்விரு நாடுகளும் அமைதியில் ஒருங்கிணைவதற்கும், அணு ஆயுத ஒழிப்பிற்கும் வழி வகுத்துள்ளது என்று, சோல் பேராயர் கர்தினால் ஆண்ட்ரு யோம் சூ-ஜுங் அவர்கள் கூறியுள்ளார்.

இதுவரை துப்பாக்கிகளை ஏந்தி நின்ற கரங்கள், இனி ஆயுதங்களைக் களைந்து, கரம் குலுக்க தயாராக உள்ளன என்பதை, இவ்விரு அரசுத் தலைவர்களும் கரம் குலுக்கிய நிகழ்வு தெளிவாக்குகிறது என்று கர்தினால் யோம் சூ-ஜுங் அவர்கள் கூறினார்.

வட கொரியாவின் தலைநகரான Pyongyang மறைமாவட்டத்திற்கு தான் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருந்தாலும், தன்னால் அங்கு செல்ல இயலவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்ட கர்தினால் யோம் சூ-ஜுங் அவர்கள், Pyongyang நகரில், பொதுநிலையினர் கூடி, கொரிய நாடுகளின் அமைதிக்காக செபித்து வருவதை தான் அறிவேன் என்றும் தெரிவித்தார்.

இதுவரை மோதல்களையும், போராட்டங்களையும் மட்டுமே கண்டுவந்த கொரிய தீபகற்பத்தில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது என்றும், இந்தச் சந்திப்பு உலக அமைதி நோக்கி எடுக்கப்பட்டுள்ள முதல் அடி என்றும், கொரிய ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஹைஜீனுஸ் கிம் ஹீ-ஜுங் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.