2018-05-02 15:33:00

திருப்பீடம், சீனா கலந்துரையாடல்கள் பற்றி..


மே,02,2018. திருப்பீடம், சீனாவுடன் நடத்திவரும் கலந்துரையாடல்களில், முக்கியமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அண்மையில் காணப்படும் பல அடையாளங்களில் தெரிந்தாலும், இருநாடுகளுக்கிடையே முறையான எந்த ஒப்பந்தமும் உடனடியாக இடம்பெறுவது போல் தெரியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

திருப்பீடம் மற்றும் சீன அரசின் பிரதிநிதிகளுக்கு இடையே சிலகாலமாக இடம்பெற்று வரும் கலந்துரையாடல்கள், சீனாவில், திருஅவை சார்ந்த பிரச்சனைகளுக்கு, உறுதியான முறையில் தீர்வு காணும் நோக்கத்தில் நடைபெறுகின்றது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல்கள் குறித்து திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், "La Stampa" இத்தாலிய தினத்தாளுக்கு அளித்த பேட்டியில், புதிய சீனாவின் மலர்ச்சியால், சீனத் திருஅவையின் வாழ்வில் கடும் துன்பங்கள் நிலவி வருகின்றன, இந்நிலையில், 1980களில், திருப்பீடம் மற்றும் சீன அரசின் பிரதிநிதிகளுக்கு இடையே தொடர்புகள் தொடங்கின எனத் தெரிவித்தார்.

இத்தொடர்புகளில், ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றபோதிலும், திருப்பீடம், எதிர்ப்புக்களை விலக்கி, மேய்ப்புப்பணி அணுகுமுறையை எப்போதும் கையாள்கின்றது என்றும், மதிப்பு மற்றும், ஆக்கப்பூர்வமான உரையாடலுக்குத் திறந்தமனதுடன் உள்ளது என்பதை உறுதி செய்ய விரும்புகின்றது என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டார்.

சமுதாயம் மற்றும் திருஅவையின் நன்மைக்கு உதவும் முயற்சியில், மதிப்புடன்கூடிய உரையாடல் சூழலுக்கு, திருப்பீடம் எப்போதும் தயாராக உள்ளது என்றும், இந்த உண்மையை, உலகில் வாழும் கத்தோலிக்கர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

ஏதோ ஒரு தொலைதூர நாட்டில் நடைபெறுகின்றது என்று நினைக்காமல், இது, திருஅவையின் வாழ்வு மற்றும் மறைப்பணியைச் சார்ந்தது என்றும், எந்த இடத்தில் வாழ்ந்தாலும், அனைத்து கத்தோலிக்கரும், திருஅவையின் உறுப்பினர்கள் என்ற உணர்வில், இவ்விவகாரத்தை நோக்குமாறும் கேட்டுக்கொண்டார், திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.