2018-05-02 15:11:00

திருத்தந்தை மறைக்கல்வி: திருமுழுக்குச் சடங்கின் அர்த்தங்கள்


மே,02,2018. கடந்த சில வாரங்களாக, திருமுழுக்கு அருளடையாளம் குறித்த தன்  சிந்தனைகளை, புதன் மறைக்கல்வி உரைகளில் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், திருமுழுக்குச் சடங்கில் தண்ணீரை ஆசீர்வதித்தல், சாத்தானை மறுதலித்தல், விசுவாசத்தை அறிக்கையிடுதல் ஆகிய சடங்குமுறைகள் குறித்து விவரித்தார்.

திருமுழுக்குத் தொட்டியில் உள்ள தண்ணீரை அசீர்வதிக்கும்போது, அது, கிறிஸ்துவில் புதிய வாழ்வின், மற்றும், பாவங்களைக் கழுவும் தூய ஆவியாரின் அருள்பொழிவின் ஆதாரமாக மாறும்படியாக திருஅவை செபிக்கிறது. பழைய ஏற்பாட்டில் திருமுழுக்குக் குறித்து கூறியிருப்பவைகளையும், யோர்தானில் இயேசு திருமுழுக்குப் பெற்றதையும், சிலுவையில் தொங்கிய இயேசுவின் விலாவிலிருந்து ஓடிய தண்ணீரையும், திருமுழுக்குச் சடங்கில் நினைவுகூர்கிறது திருஅவை. திருமுழுக்குச் சடங்கின் ஆசீர்வதிப்பு செபத்தில், திருமுழுக்குத் தொட்டியில் உள்ள தண்ணீரை இறைவன் ஆசீர்வதிப்பதன் வழியாக, அது, திருமுழுக்குப் பெறுவோர், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்ப்பின் மீட்பு மறையுண்மையில் நுழைய உதவுமாறு செபிக்கிறது. புதிய மற்றும் முடிவற்ற வாழ்வெனும் மறையுண்மையை வாழ்வதற்கு நாம் முடிவெடுத்துள்ளதன் அடையாளமாக, சாத்தானையும் அவனின் செயல்பாடுகளையும் ஒதுக்குவதாக அறிவிப்பதோடு, மூவொரு கடவுளில் திருஅவையின் விசுவாசத்தையும் அறிக்கையிடுகிறோம். புனித நீரால் நாம் ஆசீர்வதிக்கப்படும்போதெல்லாம், நாம் திருமுழுக்கின்போது பெற்ற கொடையை நன்றியுடன் நினைவுகூர்வதோடு, நம் மீட்பராம் கிறிஸ்துவில் மேலும் நெருக்கமாக உறுதிப்படுத்தப்படுவதற்கான நம் முயற்சிகளில் நிலைத்திருப்பதற்குரிய அருளையும் வேண்டுவோம்.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.