2018-04-30 13:33:00

இமயமாகும் இளமை – உழைக்காமல் உயர்வு இல்லை


உழைக்காமல் ஊர் சுற்றும் தன் மகனுக்கு உழைப்பின் அருமையை உணர்த்த விரும்பிய  செல்வந்தர் ஒருவர், தனது நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் வேலை செய்ய ஆறு மாத காலத்திற்கு அவனை அனுப்பி வைத்தார். அங்குச் சென்ற அவன், அந்நிறுவனத்தில் எந்த வேலையும் செய்யாமல் நேரத்தைச் செலவிட்டான். ஆறு மாத காலம் முடிந்ததும்,  தனது நண்பரின் மகன் என்பதால், ஒரு தங்க நாணயத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார் அந்த நிறுவனத்தின் அதிகாரி. அதைக் கொண்டுவந்து தன் அப்பாவிடம் கொடுத்தான் மகன். அதனை வாங்கியவுடன் தூர தூக்கி எறிந்தார் அப்பா. அதைப் பற்றி கவலைப்படாமல் அன்று உறங்கச் சென்றான் மகன். சிறிது நாள்கள் சென்று, வேறொரு நண்பரிடம் மூன்று மாதத்திற்கு மகனை அனுப்பி வைத்தார் செல்வந்தர். அங்கும் அவன் வழக்கம்போல, வேலை செய்யாமல் ஊரைச் சுற்றிக்கொண்டு நேரத்தைச் செலவிட்டான். மூன்று மாதம் முடிந்தவுடன், அவரும், தன் நண்பரின் மகன் என்பதற்காக, இரண்டு தங்க நாணயங்களைக் கொடுத்து அனுப்பி வைத்தார். அதைக் கொண்டுவந்து தன் அப்பாவிடம் கொடுத்தான் மகன். அப்போதும், அவனின் அப்பா, அதனைத் தூக்கி எறிந்தார். அப்பாவின் இச்செயல் மகனைப் பாதிக்கவே இல்லை. சிறிது காலம் சென்று, தனக்கு அறிமுகம் இல்லாத வேறோர் இடத்தில் மகனை வேலைக்குச் சேர்த்து விட்டார் செல்வந்தர். அங்கு மூன்று மாதம் வேலை செய்து, ஊதியமாகக் கிடைத்த அரை பவுன் தங்க நாணயத்தைக் கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்தான் மகன். அதை வாங்கிய அப்பா முன்பு போலவே அலட்சியமாகத் தூக்கி எறிந்தார். இப்போது மகனுக்குக் கோபம் வந்துவிட்டது. இந்த நாணயம் என்ன தெரியுமா, எனது கடும் உழைப்பு, எனது வியர்வை. மூன்று மாதம் தூங்காமல் நான் பார்த்த வேலையின் கூலி. சாய்வு நாற்காலியில் படுத்துக்கிடக்கும் உனக்கு, உழைப்பின் வலிமை பற்றி என்ன தெரியும் என கோபமாக கத்தினான். அப்போது அப்பா சொன்னார் – மகனே இதைத்தான் உன்னிடம் எதிர்பார்த்தேன். முன்பு நீ உழைக்காமல் கொண்டுவந்த நாணயங்களைத் தூக்கி எறிந்தபோது, உனக்குக் கோபம் வரவில்லை. காரணம், அப்போது உனக்கு உழைப்பின் அருமை தெரியவில்லை. இப்போது நீ உழைத்து, கொண்டு வந்ததால், உனக்குக் கோபம் வருகிறது என்று சொல்லி மகனையும், அரை பவுன் தங்க நாணயத்தையும் எடுத்து மாறி மாறி முத்தமிட்டார் அப்பா. ஆம். நேர்மையாக உழைக்காமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது, அதன் அருமையும் தெரியாது. அதேநேரம், உழைத்துப் பெற்ற பொருளை இழக்க மனம் ஒருபோதும் நினைக்காது

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.