2018-04-28 16:10:00

மருத்துவ சிகிச்சைகளில் முற்சார்பு எண்ணங்கள் தவிர்க்கப்பட..


ஏப்.28,2018. பல்வேறு நோய்களால் துன்புறுவோரின் துயர் துடைப்பதற்கு, அறிவியலாளர்கள், மருத்துவர்கள், நன்னெறியாளர்கள், கலாச்சார மற்றும், சமயத் தலைவர்கள் அரசு மற்றும், தொழில் பிரதிநிதிகள், குடும்பங்கள் போன்ற பல்வேறு துறையினர் இணைந்து பணியாற்றி வருவது குறித்து தான் மகிழ்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

குணப்படுத்தலுக்கு ஒன்றிணைவோம் என்ற தலைப்பில், திருப்பீட கலாச்சார அவை நடத்திய பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறத்தாழ எழுநூறு பிரதிநிதிகளை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கூட்டத்தினரின் பணிகளை, தடுத்தல், சரிசெய்தல், குணப்படுத்தல், வருங்காலத்திற்குத் தயாரித்தல் ஆகிய நான்கு வினைச்சொற்களில் சுருக்கிச் சொல்லலாம் என்று கூறினார்.

இந்த நான்கு சொற்களின் அடிப்படையில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, நாம் வாழ்ந்துவரும் வாழ்க்கை முறை மற்றும் நாம் ஊக்குவிக்கும் கலாச்சாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தினால், அநேகத் தீமைகளைக் களைய முடியும் என்ற விழிப்புணர்வு நம்மிடையே அதிகரித்து வருகின்றது என்று கூறினார்.

நவீன கலாச்சாரத்தின் தீவிர மாற்றங்களோடு தொடர்புடைய நோய்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சிறார் மற்றும் இளையோரை நினைத்துப் பார்ப்பது மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், நிலத்தில், நீரில், காற்றில் பரவவிட்டுள்ள நச்சுப்பொருள்கள் போன்றவற்றால் ஏற்படும் நோய்களின் தாக்கம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அறிவியல், இயற்கை உலகையும், மனித நலத்தையும் மிக நன்றாகப் புரிந்துகொள்ளும் சக்திமிக்கது எனவும், மனித நலம், அறிவியல் ஆய்வோடு மட்டுமல்ல, இயற்கையைப் பேணி பாதுகாப்பதோடும் தொடர்புடையது என்ற உணர்வில் வளரவேண்டியது அவசியம் எனவும் திருத்தந்தை கூறினார்.

துன்புறும் நம் சகோதரர், சகோதரிகளின் வேதனைகளைக் களைவதற்கு எடுக்கப்பட்டுவரும் அனைத்து அறிவியல் ஆய்வுகள் மற்றும் நடைமுறைகளை, திருஅவை   பாராட்டுகின்றது, அதேநேரம், எல்லாத் தொழில்நுட்பங்களும் அறநெறிப்படி ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்ற கொள்கையிலும் திருஅவை கவனமாக உள்ளது என்றும், மருத்துவ சிகிச்சைகளில் முற்சார்பு எண்ணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.  

வத்திக்கானில் நடைபெற்ற இந்த மூன்று நாள் பன்னாட்டு கூட்டத்தை, திருப்பீட கலாச்சார அவை, Cura அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் நடத்தியது. புதிய தொழில்நுட்பம், சமுதாயத்திலும், கலாச்சாரத்திலும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.