2018-04-28 16:16:00

ஆல்ஃபியின் மரணம் என்னை ஆழமாகப் பாதித்துள்ளது


ஏப்.28,2018. குழந்தை ஆல்ஃபியின் மரணம் என்னை ஆழமாகப் பாதித்துள்ளது. தந்தையாம் கடவுள் தமது கனிவான அரவணைப்பில் ஆல்ஃபியை ஏற்கும்வேளை, இன்று, ஆல்-பியின் பெற்றோருக்காகச் சிறப்பாகச் செபிக்கின்றேன் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியானது.

இங்கிலாந்தின் லிவர்பூல் சிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 23 மாதக் குழந்தை ஆல்-பி இவான்ஸ்க்குப் பொருத்தப்பட்டிருந்த மருத்துவக் கருவிகள் அகற்றப்பட்ட நிலையில், இச்சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு குழந்தை ஆல்ஃபியின் உயிர் இறைவனடி சேர்ந்தது.  

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட மற்றுமொரு டுவிட்டர் செய்தியில், நம் ஆண்டவர் இயேசு நமக்காகத் தம் வாழ்வை வழங்கியதன் வழியாக நம்மை அன்புகூர்ந்தது போன்று, நாமும் கடவுளையும், நம் அயலவரையும் அன்புகூரும்பொருட்டு, அவர் தம் அன்பை நமக்கு அளிக்கிறார் என்ற வார்த்தைகள் பதிவாகி இருந்தன.

இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியின் மாதமாகிய மே முதல் நாளன்று, உரோம் புறநகர்ப் பகுதியிலுள்ள, திவினோ அமோரே எனப்படும் இறையன்பு திருத்தலத்தில் செபமாலை செபித்து, அம்மாதத்தை ஆரம்பித்து வைப்பார் என்று, திருப்பீட தகவல் துறை அறிவித்துள்ளது.

மே 01, வருகிற செவ்வாய் மாலை 5 மணிக்கு, திவினோ அமோரே திருத்தலம் செல்லும் திருத்தந்தை, அற்புத அன்னை மரியா திருப்படம் வைக்கப்பட்டுள்ள பழைய திருத்தலத்தில் செபமாலை செபித்து, உலகின், குறிப்பாக, சிரியாவின் அமைதிக்காக  அர்ப்பணிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செபமாலை செபித்த பின்னர், திவினோ அமோரே அன்னை மரி தியாகிகள் சபையினரையும், திவினோ அமோரே பங்கு மக்கள் மற்றும் வயது முதிர்ந்த மக்கள் சிலரையும் திருத்தந்தை சந்திப்பார்.

திவினோ அமோரே திருத்தலத்தலம் அமைந்துள்ள பசுமையான பகுதி, Savelli என்பவருக்குச் சொந்தமானது. அவர், 1295ம் ஆண்டில், அப்பகுதியில், எட்டு தூண்களை அமைத்தார். 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்பகுதி சேதமடைந்தது. ஆனால் அவற்றில், நுழைவாயிலிலுள்ள ஒரு தூண் மட்டும் தற்போது உள்ளது. Castel di Leva எனப்படும் இத்தூணில், அன்னை மரியா குழந்தை இயேசுவுடன் உள்ள நேர்ச்சைப் படம் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆடுகளை மேய்த்த மேய்ப்பர்கள், குளிர்காலத்தில் அவ்விடத்தில் அடிக்கடி கூடி செபமாலை செபிப்பது வழக்கம். 1740ம் ஆண்டில் அவ்வழியாகச் சென்ற பயணி ஒருவர், காட்டு நாய்களால் தாக்கப்பட, அப்பயணி அன்னை மரியிடம் செபித்தார். அவரும் காப்பாற்றப்பட்டார் எனக் கூறப்படுகின்றது. இதன் பயனாக, திவினோ அன்னை மரியா திருத்தலத்திற்குத் திருப்பயணிகள் ஏராளமாகச் சென்று செபித்து வருகின்றனர்.   

இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் திருஉடல், திருஇரத்த பெருவிழாவாகிய ஜூன் 3, ஞாயிறு மாலை 6 மணிக்கு, ஓஸ்தியாவிலுள்ள புனித மோனிக்கா பங்குத்தளம் சென்று திருப்பலி நிறைவேற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.