2018-04-27 15:41:00

மூன்றாவது உலக கிறிஸ்தவ மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி


ஏப்.27,2018. ஒவ்வொரு சூழலிலும் மனித மாண்பு காக்கப்படல், ஒருவர் ஒருவரை மன்னித்தல், மதித்தல் ஆகியவற்றை, கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து ஊக்குவிக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ சபைகளின் உலக மாநாடு ஒன்றிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

பொகோட்டாவில், ஏப்ரல் 27, இவ்வெள்ளிக்கிழமையன்று நிறைவடைந்த, மூன்றாவது உலக கிறிஸ்தவ மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தியில், இக்காலத்தின் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவைப்படும், கிறிஸ்தவ சபைகளின் ஒருமைப்பாடு மற்றும் ஒத்துழைப்பை ஊக்கப்படுத்த, இம்மாநாடு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

உலகின் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து, இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகவும், இவர்கள் இதில் கலந்துகொள்வது, எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற இயேசுவின் செபம் நிறைவேறுவதை நோக்கிச் செல்வதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற இம்மாநாட்டில், உலகின் பல்வேறு கண்டங்களிலிருந்து கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

மேலும், இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், கடவுளின் அருளுக்கு நாம் திறந்த மனதுள்ளவர்களாய் இருக்கையில், இயலக்கூடாததுகூட இயலக்கூடியதாக மாறும் என்ற சொற்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.