2018-04-27 15:01:00

மான்ஃபோர்ட் குழுமத்தினருக்கு திருத்தந்தை உரை


ஏப்.27,2018. உறுதியான மாற்றத்தின் பிடியிலுள்ள இன்றைய தாராளமயமாக்கப்பட்ட உலகிற்கு, அன்புக் கலாச்சாரம் ஒன்றே, உயிராற்றலைக் கொடுக்க இயலும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு துறவு சபையினரிடம் கூறினார்.

புனித கபிரியேல் அருள்சகோதரர்கள் சபை மற்றும் மான்ஃபோர்ட் (Monfort) குழுமத்தின் ஏறத்தாழ தொன்னூறு பிரதிநிதிகளை, இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சபையை நிறுவிய புனித லூயிஜி மரியா மான்ஃபோர்ட் (Luigi Maria Grignion de Monfort) அவர்களின் ஆன்மீகத்தை மையப்படுத்தி பேசினார்.

ஆன்மீக நெருக்கடி மிகுந்துள்ள இக்காலத்தில், சமூகங்களை, சிறப்பாக, இளையோரை வரவேற்று, அவர்கள் கிறிஸ்துவின் அழைப்புக்கு மகிழ்வுடன் செவிசாய்க்க உதவுமாறு, மான்ஃபோர்ட் குழுமத்தினருக்கு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவக் கல்வியை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள இக்குழுமத்தினர், கடவுளிடமிருந்து இலவசமாகப் பெற்றுள்ள வாழ்வெனும் கொடையைப் போற்றி வளர்க்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இதயத்தோடும், கரங்களோடும் அன்புகூருமாறு பரிந்துரைத்தார்.

உடன்பிறப்பு வாழ்வு மற்றும், மான்ஃபோர்ட் மறைப்பணிக் குழுமத்தின் பண்பு என்ற தலைப்பில், இக்குழுமத்தினர், 32 வது பொதுப் பேரவையை நடத்திவருவது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, குழு வாழ்விலும், திருத்தூதுப் பணிகளிலும், உடன்பிறப்பு உணர்வு மேலோங்கி நிற்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

முன்னூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குமுன் உயிரிழந்த, புனித லூயிஜி மரியா அவர்களின் விழாவை, ஏப்ரல் 28, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கவுள்ளீர்கள், இப்புனிதரின் வாழ்வில், இறைவார்த்தை, ஞானம் ஆகிய இரண்டு கூறுகளும், மையமாக இருந்தன என்று கூறினார், திருத்தந்தை.

பிரான்ஸ் நாட்டின் La Rochelle எனுமிடத்தில், ஏறத்தாழ 1711ம் ஆண்டில், புனித லூயிஜி மரியா அவர்கள், ஏழைச் சிறாருக்காக சில பள்ளிகளைத் தொடங்கினார். இப்புனிதர் ஆரம்பித்த சபையை, அருள்பணி Gabriel Deshayes அவர்கள், ப்ரெஞ்ச் புரட்சிக்குப்பின், வழிநடத்தினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.