2018-04-27 16:42:00

இமயமாகும் இளமை: வெற்றிடத்தை நிரப்பவேண்டிய இளையோர்


பாண்டிய நாட்டை 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டுவர இரண்டு பேரரசர்களும் ஐந்து சிற்றரசர்களும் ஒரே சமயத்தில் படையெடுத்து வந்தனர். ஆனால் அப்போது அரியணையில் இருந்தவர் இளைஞனுக்கும் சிறுவனுக்கும் இடைப்பட்ட வயதில் இருந்த நெடுஞ்செழியன். சேரன், சோழன் இரண்டு பேரரசுகளையும், தித்தியன், எழினி, எருமையூரன், இருங்கோவண்மான், பொருநன் ஆகிய ஐந்து சிற்றரசர்களையும் சிதறடித்துப் பாண்டிய ராஜ்யத்தைக் காப்பாற்றினார் அவர்.

வடநாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த மன்னர்கள், இங்குள்ள தமிழ் மன்னர்களான, மூவேந்தர்களை அங்கு நடந்த ஒரு விழாவில் மிக இழிவாகப் பேசிய செய்தி மூவேந்தர்களை வந்தடைந்தது. மூவேந்தர்களின் சார்பாகச் சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்று, வென்று, இமயத்தில் கல்லெடுத்து, கங்கையில் குளிப்பாட்டி, அதில் கண்ணகிக்கு சிலை எடுக்க அந்த மன்னர்களின் தலையில் சுமக்க வைத்து அழைத்து வந்தார்.

புதிய கட்டிடக்கலை நுட்பத்தை அன்றே உலகிற்குப் படைத்த தஞ்சை பெரிய கோவிலைத் தந்தவர் ராஜராஜன். ராஜராஜனின் மகன் இராஜேந்திரன் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் 3000 கடல் மைல்கள் தாண்டி தான் வென்ற அத்தனை நாடுகளிலும் புலிக்கொடி பறக்க வைத்த வீர மன்னர். அவர் வென்ற நாடுகளின் பட்டியல்களை படிக்கும்போது பரவசமாய் இருக்கிறது.

ஆனால் இன்று, மற்றவர்களுக்கு அடிமையாய் இருப்பதில் ஒரு சுகம். அடிமையாக மாற விரும்பாதவர்களையும் மாற்றிவிடுவதில் ஓர் அக்கறை. காரணம் அதற்கு "சமூகப் பாதுகாப்பு” என்ற வசதியான குறியீடு வேறு.

அக்கால தமிழனத்தின் பண்புகள் என்பது, அறிவு, ஒழுக்கம், அஞ்சாமை, உதவும் மனப்பான்மை இவற்றுடன் தன்னம்பிக்கை. ஆனால், இன்றோ, தமிழர்களின் வாழ்க்கையில் அறிவுக்குக் கொடுக்கும் மரியாதையை விட உணர்ச்சிகளுக்கு அளிக்கும் மரியாதை மிக அதிகம். அது திரை என்றாலும் சரி, அரசியல் தலைவர்களின் உரை என்றாலும் சரி. ஒரு குற்றம் செய்து விட்டாலே தோன்றும் குற்ற உணர்ச்சி என்பது இன்று மாறி, “நீ பிழைக்கத் தெரியாதவன்” என்று முடித்து விடுகின்றார்கள்.

இன்று, தமிழ் கலாச்சாரத்தில், பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. நிரப்பவேண்டிய பணி, இளையோரின் கைகளில் உள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.