2018-04-26 15:39:00

கர்தினால்கள் குழுவின் 24வது கூட்டத்தைப்பற்றிய விவரங்கள்


ஏப்.26,2018. ஏப்ரல் 23, இத்திங்கள் முதல், 25 புதன் முடிய வத்திக்கானில் நடைபெற்ற C9 கர்தினால்கள் குழுவில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் குறித்து, திருப்பீட செய்தித் தொடர்புத் துறையின் தலைவர், Greg Burke அவர்கள், இப்புதன் மதியம் செய்தியாளர்களிடம் பேசினார்.

Roman Curia என்றழைக்கப்படும் திருப்பீட உயர்நிலை அமைப்பில் உருவாக்கப்பட்டுவரும் மாற்றங்களைக் குறித்த விதிமுறைகளின் அறிக்கையொன்றை கர்தினால்கள் குழு தயாரித்து வருகிறது என்று Burke அவர்கள் கூறினார்.

திருஅவையில், சிறாருக்கு எதிராக நிகழும் பாலியல் துன்புறுத்தல்களை நீக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து, பாஸ்டன் பேராயர் கர்தினால் Sean O’Malley அவர்கள், C9 கர்தினால்கள் குழுவிடமும், திருத்தந்தையிடமும் விளக்கிக் கூறினார் என்பதை, Burke அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

வத்திக்கான் தொடர்புத் துறையில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் குறித்து இத்துறையின் செயலர் அருள்பணி லூச்சியோ ரூயிஸ் அவர்கள், கர்தினால்கள் குழுவிடமும், திருத்தந்தையிடமும் அறிக்கையொன்றை வழங்கினார்.

C9 கர்தினால்களின் குழு, வருகிற ஜூன் மாதம் 11ம் தேதி முதல், 13ம் தேதி முடிய தன் 25வது சந்திப்பை மேற்கொள்ளும் என்று தொடர்புத் துறையின் தலைவர் Greg Burke அவர்கள் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.