2018-04-25 16:35:00

பேராயர் ஆபிரகாம் விருத்தகுலங்கரா அடக்கத் திருப்பலி


ஏப்.25,2018. ஏப்ரல் 19, கடந்த வியாழன், மாரடைப்பால் உயிரிழந்த பேராயர் ஆபிரகாம் விருத்தகுலங்கரா அவர்களின் அடக்கத் திருப்பலி, ஏப்ரல் 23 இத்தங்களன்று, நாக்பூர் பேராலயத்தில் நடைபெற்றது.

இரு கர்தினால்கள், 50க்கும் மேற்பட்ட ஆயர்கள், நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் 5000த்திற்கும் அதிகமான விசுவாசிகள், இத்திருப்பலியில் கலந்துகொண்டனர் என்று, UCA செய்தி கூறுகிறது.

மதம், அரசியல், சமுதாயம் என்ற பல தளங்களில் இருந்த தலைவர்களையும், மக்களையும் தன் அன்பினால் கவர்ந்தவர் பேராயர் விருத்தகுலங்கரா அவர்கள் என்று சீரோ மலபார் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

கிராமங்களில் வாழும் எளிய மக்களோடு தன் நேரத்தைச் செலவிட விரும்பிய பேராயர் விருத்தகுலங்கரா அவர்கள், இந்தியத் திருஅவைக்கு கிடைத்த ஓர் அரிய கருவூலம் என்று சீரோ மலங்கரா கர்தினால், பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் அடக்கச் சடங்கின்போது கூறினார்.

1943ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி கேரளாவில் பிறந்த ஆபிரகாம் அவர்கள், 1969ம் ஆண்டு, தன் 26வது வயதில் அருள்பணியாளராகவும், 34வது வயதில் ஆயராகவும் அருள்பொழிவு பெற்றார்.

1977ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கந்துவா (Khandwa) மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பேற்ற விருத்தகுலங்கரா அவர்கள், அங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியபின், 1998ம் ஆண்டு, ஏப்ரல் 22ம் தேதி, நாக்பூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக பொறுப்பேற்று, தன் 20 ஆண்டுகள் பணியை நிறைவு செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன், தன் 74வது வயதில் இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.