2018-04-25 15:52:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : ஹிப்போ புனித அகுஸ்தீன் பகுதி 4


ஏப்.25,2018. புனித அகுஸ்தீன் அவர்கள், மிலான் நகரில் புனித ஆயர் அம்புரோஸ் அவர்களிடம், கி.பி. 387ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதிக்கும் 25ம் தேதிக்கும் இடைப்பட்ட கிறிஸ்து உயிர்ப்புத் திருவிழிப்பு வழிபாட்டில், தன் மகன் அதேயோதாத்துசுடன் திருமுழுக்குப் பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டில், கத்தோலிக்கத் திருஅவையின் புனிதம் குறித்த தனது எதிர்மறை சிந்தனைகளுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். “கடந்த காலம் இல்லாப் புனிதரும் இல்லை, எதிர்காலம் இல்லாப் பாவியும் இல்லை” என்று சொல்லியுள்ள புனித அகுஸ்தீன் அவர்கள், கிறிஸ்தவத்திற்கு மனம் திரும்பியபின், மெய்யியல், இறையியல், சமூவியல் உட்பட பல்வேறு துறைகளில் கொள்கைகளை விரித்துரைப்பதில் ஈடுபட்டு, பல நூல்களை இயற்றினார். மனிதருக்குச் சுதந்திரம் உண்டு என்று ஏற்றுக்கொண்ட புனித அகுஸ்தீன், கடவுளின் அருள் இன்றி மனித சுதந்திரம் செயல்பட இயலாது என்று கற்பித்தார். கிறித்தவ சமயத்தின் ஒரு முக்கிய கொள்கையாகிய ஆதிப் பாவம் என்பது பற்றியும், போரில் ஈடுபடுவதற்கான நிபந்தனைகள் பற்றியும், நீதிப்போர் கொள்கை என்னும் தலைப்பிலும் இவர் எடுத்துக் கூறிய கருத்தியல்கள் கிறித்தவத்தில் செல்வாக்குப் பெற்றன. மேற்குலகில், உரோமைப் பேரரசு மறையத் தொடங்கிய காலத்தில், அகுஸ்தீன் அவர்கள், தான் எழுதிய "கடவுளின் நகரம்" (City of God) எனும் நூலில், திருஅவை என்பது கடவுளை வழிபடுகின்ற சமூகம் என்பதால், அது ஆன்மீக முறையில் கடவுளின் நகரமாக உள்ளது என்றும், இது உலகம் என்னும் பொருண்மைசார் நகரத்திலிருந்து வேறுபட்டது என்றும், ஒரு கருத்தை முன்வைத்தார். இவரது சிந்தனைகள் மத்தியகால கலாச்சாரத்திலும், உலக நோக்கிலும் தாக்கத்தைக் கொணர்ந்தன.

புனித அகுஸ்தீன் அவர்களின் மனமாற்றப் பயணம், அவர் மிலான் நகரில் திருமுழுக்குப் பெற்றதோடு நின்றுவிடவில்லை. திருமுழுக்குப் பெற்ற அடுத்த ஆண்டில், அதாவது 388ம் ஆண்டில் தன் மகனோடு ஆப்ரிக்கா திரும்பினார். அவர்கள் ஆப்ரிக்காவுக்கு கப்பலேறத் தயாரித்தவேளையில், அவரின் அன்னை மோனிக்கா, உரோம் நகரின் புறநகரிலுள்ள கடற்கரை நகரமான ஓஸ்தியாவில் காலமானார். அகுஸ்தீனாரும், அவரின் மகனும் ஆப்ரிக்கா திரும்பிய பின்னர், சொந்த ஊரான Thagasteல், அவர்கள் குடும்பச் சொத்தில் காலத்தைச் செலவிட்டனர். விரைவில் அவரது மகனும் இறந்துவிடவே, அகுஸ்தீன் அவர்கள், தனது வீட்டைத் தவிர ஏனைய அனைத்து சொத்துக்களையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். பின்னர் அவர், தனது வீட்டை, தனக்கும், தன் நண்பர்களுக்கும் துறவு இல்லமாக மாற்றினார். புனித அகுஸ்தீன் அவர்களின் மனமாற்றப் பயணம் பற்றி, 2008ம் ஆண்டில் புதன் மறைக்கல்வியுரையில் கூறிய, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஆழ்நிலை தியான வாழ்வும், ஆய்வுமே அகுஸ்தீன் அவர்கள் வாழ்வின் கனவாக இருந்தன என்று குறிப்பிடுகிறார். தனது வீட்டை துறவு இல்லமாக மாற்றிய பின்னர், அகுஸ்தீன் அவர்கள், உண்மைக்காக, உண்மையாம் கிறிஸ்துவுடன் நட்புறவுடன் வாழ்வதற்குத் தான் அழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார். இந்த இவரின் அழகான கனவு மூன்று ஆண்டுகளே நீடித்தன. ஏனெனில், இவரின் விருப்பத்திற்கு மாறாக, 391ம் ஆண்டில், அல்ஜீரியா நாட்டின் ஹிப்போ ரேஜியுஸ் என்னும் நகரில், அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தற்போது அந்த நகர் Annaba என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

ஹிப்போவில் விசுவாசிகளுக்குப் பணியாற்றும் பொறுப்பு அகுஸ்தீன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்காகத் தொடர்ந்து வாழ்வதற்காக, அதேநேரம், அனைவருக்கும் பணியாற்றுவதற்காகத் தன்னை அர்ப்பணித்தார் அகுஸ்தீன். இது அவருக்கு மிகவும் கடினமானதாக இருந்தாலும், தனித்து தியான வாழ்வை வாழ்வதைவிட, பிறருக்காக வாழ்வதிலேயே, கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்காக உண்மையிலேயே வாழ முடியும் என்பதை, தொடக்க முதலே புரிந்துகொண்டிருந்தார். எனவே, தியானத்தில் மட்டுமே தன் வாழ்வைச் செலவழிப்பதைத் துறந்து, தனது அறிவு ஏனையோருக்கும் முழுவதும் பயன்படும் முறையில் வாழத் தொடங்கினார் அகுஸ்தீன். தனது விசுவாசத்தை எளிய மக்களுக்கு அளிக்கக் கற்றுக் கொண்டார் அவர். ஹிப்போ மக்களுக்காகவே வாழக் கற்றுக்கொண்டார். தொடர்ந்து போதித்து, கலந்துரையாடி, ஒவ்வொருவரின் தேவைக்கும் தன்னை இருத்துவது, மிகப்பெரிய மற்றும், கடினமான பொறுப்பாகும் என்று, (மறையுரை எண் 399,4) அகுஸ்தீன் அவர்களே தனது மறையுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த முறையில்தான் கிறிஸ்துவோடு நெருங்கிய உறவில் இருக்க முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட அகுஸ்தீன், அனைத்துப் பளுவையும் தானே ஏற்றார். எளிமை மற்றும், தாழ்ச்சியோடு மற்றவரை அணுகுவதற்கு இவர் புரிந்து கொண்டது, இவரின் இரண்டாவது மனமாற்றம் என, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் சொல்கிறார்.

புனித அகுஸ்தீன் அவர்கள், ஹிப்போ நகரில் புகழ்பெற்ற மறையுரையாளராக மாறினார். அவரின் 350க்கும் மேற்பட்ட மறையுரைகள் பாதுகாப்பாக இன்றும் வைக்கப்பட்டுள்ளன. ஒருகாலத்தில் அவர் பின்பற்றிய மனிக்கேய மதத்திற்கெதிராகப் போதித்து வந்தார். இவரின் கிறிஸ்தவப் பயணத்தில் ஏற்பட்ட மூன்றாவது மனமாற்றம், ஒவ்வொரு நாள் வாழ்விலும் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டதாகும்.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.