2018-04-24 16:12:00

மக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துமாறு அரசுக்கு அழைப்பு


ஏப்.24,2018. வெனெசுவேலா நாட்டை, கடும் மனிதாபிமான நெருக்கடிகள் பாதித்துள்ள இவ்வேளையில், அரசுத்தலைவர், மீண்டும் தேர்தலில் நிற்க முயற்சிப்பது, சட்டத்திற்கு முரணானது என்று, அந்நாட்டு ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.

தற்போது வெனெசுவேலா நாடு எதிர்நோக்கும் கடும் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, இத்திங்களன்று அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், இத்தகைய பிரச்சனைகளை, அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது, வியப்பைத் தருகின்றது என்று கூறியுள்ளனர்.

அரசுத்தலைவர் நிக்கோலாஸ் மதுரோ அவர்கள், மீண்டும் தேர்தலில் நிற்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஆயர்கள், நாட்டை, கடும் மனிதாபிமான நெருக்கடிகள் பாதித்துள்ள இவ்வேளையில், வருகிற மே 20ம் தேதி அரசுத்தலைவர் தேர்தலை நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருப்பது, சட்டப்படி நியாயமல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.

கடும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்கும் மக்கள், நாட்டைவிட்டு வெளியேறுவது அதிகரித்து வருகின்றது என்றும், இந்நிலை குடும்ப உறவுகளைப் பாதிக்கின்றது மற்றும், வயதானவர்களையும், சிறாரையும் தனிமைப்படுத்துகின்றது    என்றும், வெனெசுவேலா ஆயர்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.