2018-04-23 15:35:00

இறைவனை மட்டுமே மகிழ்ச்சிப்படுத்த அழைக்கப்பட்டுள்ளனர்


ஏப்.23,2018. இரக்கம் காட்டுவதில் ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புதிய அருள்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஏப்ரல் 22, நல்லாயன் ஞாயிறன்று காலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை, 16 தியாக்கோன்களை, அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்த திருப்பலியின்போது வழங்கிய மறையுரையில், கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் இரக்கத்துடன் மன்னித்ததுபோல், ஒவ்வோர் அருள்பணியாளரும் மற்றவர்களை மன்னிக்க கடமைப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்யப்படும் திருப்பலிகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மறையுரையைத் அடித்தளமாகக் கொண்டு, கூடுதலான எண்ணங்களை இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை வழங்கினார்.

அருள்பணியாளர்கள், தங்களையோ, மற்ற மனிதர்களையோ மகிழ்ச்சிப்படுத்த அழைக்கப்படவில்லை, மாறாக, இறைவனை மட்டுமே மகிழ்ச்சிப்படுத்துவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கரங்களால் திருப்பொழிவு பெற்ற 16 அருள்பணியாளர்கள், இத்தாலி, இந்தியா, குரோவேசியா, வியட்நாம், மியான்மார், கொலம்பியா, எல் சால்வதோர், மடகாஸ்கர், உரோமேனியா மற்றும் பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.