2018-04-19 15:46:00

மியான்மாரில் 8,500க்கும் அதிகமான கைதிகள் விடுதலை


ஏப்.19,2018. ஏப்ரல் 13ம் தேதி முதல், 16ம் தேதி முடிய மியான்மார் நாட்டில் கொண்டாடப்பட்ட புத்தாண்டு விழாவையொட்டி, ஏப்ரல் 17, இச்செவ்வாயன்று, அந்நாட்டு அரசுத் தலைவர், Win Myint அவர்கள், 8,500க்கும் அதிகமான கைதிகளுக்கு விடுதலை அளித்துள்ளார் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

விடுதலை செய்யப்பட்ட 8.490 மியான்மார் குடிமக்கள், மற்றும் 51 வெளிநாட்டவர் கொண்ட இந்த கூட்டத்தில், கச்சின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இரு கிறிஸ்தவ போதகர்களும் அடங்குவர்.

2016ம் ஆண்டு, மியான்மார் அரசு மேற்கொண்ட தாக்குதல்களில், கத்தோலிக்கக் கோவில் ஒன்று அழிக்கப்பட்டதை, செய்தியாளர்களிடம் வெளிப்படுத்திய 67 வயது கிறிஸ்தவப் போதகர் Dumdaw Nawng Lat அவர்களும், 35 வயது நிறைந்த பாப்டிஸ்ட் இளையோர் குழுவின் தலைவர் Langjaw Gam Seng அவர்களும் இச்செவ்வாயன்று விடுவிக்கப்பட்டனர்.

மியான்மரின் கச்சின் மாநிலத்தில் 90,000த்திற்கும் மேற்பட்ட மக்கள், உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்து வாழும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.