2018-04-19 15:07:00

செபிப்பது, வேலை செய்வது, படிப்பது - புனித பெனடிக்ட் ஆன்மீகம்


ஏப்.19,2018. கடந்த 15 நூற்றாண்டுகளாக, புனித பெனடிக்ட் துறவு சபையினர், கத்தோலிக்கத் திருஅவைக்கும், உலகிற்கும் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி கூறுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த இத்துறவு சபை உறுப்பினர்களிடம் கூறினார்.

புனித பெனடிக்ட் பெயரால் உலகெங்கும் நிறுவப்பட்டிருந்த பல சபைகள் ஒருங்கிணைந்து Benedictine Confederation எனப்படும் கூட்டமைப்பை உருவாக்கியதன் 125வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிவரும் இத்துறவு சபையின் 400க்கும் அதிகமான உறுப்பினர்களை, ஏப்ரல் 19, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியத் திருத்தந்தை, தன் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

புனித பெனடிக்ட் பெயரைத் தாங்கிய பல்வேறு சபைகளை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாக, 1893ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், பெனடிக்ட் துறவியர் கல்வி கற்கவும், செபிக்கவும் உதவியாக உரோம் நகரில் இல்லம் ஒன்றைத் துவக்கியதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

செபிப்பது, வேலை செய்வது, படிப்பது என்ற மூன்று செயல்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, புனித பெனடிக்ட் ஆன்மீகம் என்றும், ஆழ்நிலை தியானங்களில், இறைவன் தன்னை எதிர்பாராத வழிகளில் வெளிப்படுத்துகிறார் என்றும் திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

எதிர்பாராத வழிகளில் தன்னை வெளிப்படுத்திய கிறிஸ்துவைக் கொண்டாடும் இந்த உயிர்ப்புக் காலத்தில் நாம் உள்ளோம் என்பதையும், "கிறிஸ்துவுக்கு முன் எதற்கும் நாம் முன்னிடம் கொடுக்கக்கூடாது" (எண் 72) என்று புனித பெனடிக்ட், தன் ஒழுங்கு முறைகளில் கூறியுள்ளதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

இறைவனின் குரலுக்குச் செவிசாய்க்க நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் இவ்வுலக மக்களுக்கு, புனித பெனடிக்ட் துறவு சபையினர், ஓர் எடுத்துக்காட்டாக அமைந்து, அனைத்திற்கும் முதன்மையாக இறைவனுக்கு இடம் வழங்க கற்றுத்தர வேண்டும் என்று, திருத்தந்தை, இத்துறவு சபையினருக்கு அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.