2018-04-18 15:40:00

மறைக்கல்வியுரை : திருமுழுக்குச் சடங்குகள் வெளிப்படுத்துபவை


ஏப்.18,2018. திருப்பலி குறித்த தன் மறைக்கல்வித் தொடருக்குப்பின் அண்மையில், திருமுழுக்குக் குறித்த தொடரை ஆரம்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, திருமுழுக்குச் சடங்கின் வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

அன்பு சகோதர சகோதரிகளே,  திருமுழுக்கு அருளடையாளம் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, இயேசுவில் நம் புதிய வாழ்வின் துவக்கம் திருமுழுக்கு என்பதை, இச்சடங்களில் வெளிப்படுத்தும் வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நோக்குவோம். குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறார்கள் என பெற்றோரிடம் முதலில் கேட்கப்படுகிறது. திருமுழுக்கில் நமக்கு வழங்கப்படும் பெயர், நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மையுடையவர்கள் என்பதையும், நாம் கடவுளால் அன்புகூரப்பட்டு, அந்த அன்புக்கு நம் வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் பதிலுரைக்க அழைப்புப் பெற்றவர்கள் என்பதையும் நினைவுறுத்தி நிற்கிறது. நீராலும் தூய ஆவியாலும் மீண்டும் பிறப்பெடுத்த நாம், கடவுளின் குழந்தைகளாக மாறி, தந்தையாம் இறைவனின் நிலைபேறுடைய மகனாம் இயேசுவுடன் ஒன்றிப்பில் விசுவாசப் பயணத்தையும், புனிதத்துவ வளர்ச்சியையும் துவக்குகிறோம். திருஅவையின் விசுவாசத்தில் குழந்தையை வளர்த்தெடுப்போம் என்ற வாக்குறுதியை வழங்கும் பெற்றோரும், ஞானப் பெற்றோரும், அதன் நெற்றியில் சிலுவை அடையாளத்தை வரைகின்றனர். சிலுவையின் மறையுண்மை, நம் வாழ்வின் ஒவ்வொரு வேளையிலும் நம்மோடு உடன்வருகிறது, ஏனெனில், இயேசுவுக்குச் சொந்தமாகியுள்ள நாம், அவர் சாவிலிருந்து வாழ்வுக்கு கடந்து சென்றதில் பங்குபெறுகிறோம். ஒவ்வொரு நாளும் நாம் சிலுவை அடையாளம் வரையும்போது, நம் திருமுழுக்கின் அருள் குறித்து பெருமகிழ்ச்சியடைவதுடன், நம் மீட்பராம் இயேசு கிறிஸ்துவால் நம்மீது பொழியப்பட்ட முடிவற்ற வாழ்வு, மறுபிறப்பு மற்றும் மீட்பு மறையுண்மைக்குள் மேலும் ஆழமாக நுழைவோமாக.

தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் சனிக்கிழமையன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் நகரில் இடம்பெறவுள்ள உலக வங்கியின் கூட்டம் பற்றிக் குறிப்பிட்டு, பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், ஏழைகளின் வாழ்வை முன்னேற்றும் நோக்கில், மனித மாண்பை மதித்தலுடன் கூடிய ஒன்றிணைந்த வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும், பிரான்ஸ் நாட்டில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்ற விபத்தால் மூளை பெரும் சேதம் அடைந்து, சுயநினைவற்ற நிலையில், மருத்துவ மனையில் செயற்கை வழியில் உணவூட்டப்பட்டு வாழ்ந்துவரும் வின்சென்ட் லேம்பர்ட் என்பவரையும், இங்கிலாந்தில் அரிய வகை நரம்புக் கோளாறினால் பாதிக்கப்பட்டு, 2016ம் ஆண்டு டிசம்பர் முதல் மருத்துவமனையில், மருத்துவ கருவிகளின் உதவியுடன் வாழ்ந்துவரும் ஆல்ஃபி இவான்ஸ் என்ற 23 மாத குழந்தை குறித்தும் தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை. வாழ்வின் துவக்கம் முதல் இறுதி வரை, வாழ்வுக்குப் பொறுப்பானவர் இறைவன் ஒருவரே என்பதை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வைப் பாதுகாப்பதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் ஆற்றுவோம். இந்த நம் இரு சகோதரர்களுக்காக இந்நேரத்தில் அமைதியில் செபிப்போம், என விண்ணப்பித்தார். இப்புதன் காலை, மறைக்கல்வி உரையைத் துவக்குவதற்கு முன்னர், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் உரோம் நேரம் 9 மணிக்கு, சிறுவன் ஆல்ஃபி இவான்சின் தந்தை தாமஸ் இவான்ஸ் அவர்களையும் சந்தித்து 20 நிமிடங்கள் உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். மறைக்கல்வி உரையின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.