2018-04-18 15:19:00

தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி - இந்திய ஆயர்கள்


ஏப்.18,2018. அண்மையில் இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மக்கள் வெளிப்படுத்திய கண்டனங்களும், போராட்டங்களும், இந்திய நாடு, ஆன்மாவோடும், இதயத்தோடும், அறிவோடும் செயலாற்றுகிறது என்பதை உலகறியச் செய்துள்ளன என்று, இந்திய ஆயர் பேரவைச் செயலர், ஆயர் தியடோர் மஸ்கரினஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்தியாவின் Kathua மற்றும் Unnao ஆகிய இடங்களில் பெண்களுக்கு எதிராக, அதுவும் சிறுமிக்கு எதிராக நிகழ்ந்துள்ள கொடுமைகளை வன்மையாகக் கண்டனம் செய்து, இந்திய ஆயர்  பேரவை சார்பில், ஆயர் மஸ்கரினஸ் அவர்கள் மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதம் மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக, பெண்களை, குறிப்பாக சிறுமிகளை இலக்குகளாகப் பயன்படுத்தும் மனிதர்கள், மனித இயல்பின் மிக இருளான பக்கங்களை நம் கவனத்திற்குக் கொணர்கின்றனர் என்று ஆயர் மஸ்கரினஸ் அவர்கள் கூறியுள்ளார்.

Kathuaவில் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட 8 வயது சிறுமியும், Unnaoவில் அதே வண்ணம் கொல்லப்பட்ட இளம்பெண்ணும் நம் ஒவ்வொருவருடைய குடும்பத்தையும் சேர்ந்தவர்கள், அவர்களின் மதமோ, சாதியோ அவர்களை நம் குடும்பங்களிலிருந்து பிரித்துவிடவில்லை என்று ஆயர் மஸ்கரினஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்குகளில் தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதியாக மாறும் என்றும், இந்தியாவில் நடைபெறும் கொடுமைகள் அனைத்திலும் இந்திய ஆயர் பேரவை, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நிற்கிறது என்றும் ஆயர் மஸ்கரினஸ் அவர்கள், பேரவை சார்பில் வெளியிட்டுள்ள மடலில் கூறியுள்ளார்.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.