2018-04-18 15:31:00

இமயமாகும் இளமை.........: இளமையிலேயே கனவுகளை விதையுங்கள்


சிறுவனாக இருந்தபோது முதல் முறையாக திசை காட்டும் கருவி (காம்பஸ்) ஒன்றைப் பார்த்து அதிசயித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். எப்படி திசையை மாற்றினாலும் அதிலிருந்த முள் வடக்கு நோக்கியே நகர்ந்ததைக் கண்டு, அப்படி அதை இயக்கும் கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியைப் பற்றி ஐன்ஸ்டைன் அறியத் துடித்தார். அவருடைய அந்த ஆவல் அறிவியல் துறை நோக்கி அவரைப் பயணம் செய்ய வைத்தது. இளமை முழுவதும் ஐன்ஸ்டைனுக்கு இருந்த அந்த அறிவியல் தாகம், அந்த நூற்றாண்டின் இணையற்ற அறிவியலாளராக அவரை மாற்றியது. அதுவரை இருந்த பல அறிவியல் கோட்பாடுகளைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு புதிய வரலாறு படைத்தார் ஐன்ஸ்டைன்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், இராமேசுவரம் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். 16-8-1947 தேதியிடப்பட்ட தமிழ் நாளேட்டில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நேரு விடுத்த வரலாற்றுப் புகழ்மிக்க உரை பதிவானதை மிகுந்த ஆர்வத்தோடு படித்தார் அப்துல் கலாம். அந்தச் செய்திக்கு அருகிலேயே இன்னொரு செய்தியும் இருந்தது. நவகாளியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக மகாத்மா காந்தி வெறும் காலுடன் நடந்து போய்க்கொண்டிருந்த படத்துடன் விவரித்திருந்த அந்த செய்தி அப்துல் கலாம் அவர்களை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. தேசத்தந்தை என்ற நிலையில் செங்கோட்டையில் முதன்முதலில் தேசியக்கொடியை ஏற்றவேண்டிய மனிதர், அதை விட்டு விட்டு பொதுச் சேவையில் தன்னை அந்தக் கணத்தில் ஈடுபடுத்திக் கொண்டது பள்ளி மாணவர் அப்துல் கலாம் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்ததாக அவரே ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தன்னலமில்லா ஒரு அறிவியலாளராகவும், தலைவராகவும் அவர் உருவானதற்கான விதை அன்று விதைக்கப்பட்டது என்று கூட அதைச் சொல்லலாம்.

இப்படி, இளமைக் காலத்தில், இளையோர் மனதில் விதைக்கப்பட்ட கனவுகள், அவர்கள் சிந்தித்த சிந்தனைகள், உழைத்த உழைப்புகள் எல்லாம் சேர்ந்துதான், பெரிய மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.