2018-04-17 15:42:00

இமயமாகும் இளமை - அரசு பள்ளிகளுக்குப் புத்துயிர் தந்து...


போதிய மாணவர் சேர்க்கை இல்லை எனக் கூறி, அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி, மூடவிருக்கும் பள்ளிகளை பாதுகாத்து வருகிறார், ஊட்டியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஷோபா. இதுவரை 4 அரசு பள்ளிகள், இவரால், மூடு விழாவில் இருந்து தப்பித்துள்ளன.

ஊட்டி அருகே உள்ள சோளூரில் பிறந்த ஷோபா அவர்கள், ஆங்கிலம் மற்றும் தமிழில் பட்டம் பெற்று, 1988-ல் கூடலூர் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் 2003-ல் பதவி உயர்வு பெற்று, தலைக்குந்தா பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் ஆனார்.

இப்பள்ளி, சுடுகாட்டுக்கு அருகே இருந்ததால் சடலங்கள் எரியூட்டப்படும்போதெல்லாம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், மாணவரின் படிப்பு பாதித்தது மட்டுமல்லாமல், மாணவர் சேர்க்கையும் குறைந்தது. படிப்படியாக பள்ளி மூடப்படும் நிலைக்கு வந்தது.

பிரச்சனையை உணர்ந்த ஷோபா அவர்கள், உடனே பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியில் இறங்கினார். பள்ளியின் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக்கப்பட்டதால், பள்ளி புதுப்பொலிவு பெற்றது. மாணவர் சேர்க்கையும் அதிகரித்தது.

தலைக்குந்தா தொடக்கப் பள்ளியைக் காப்பாற்றிய ஷோபா அவர்கள், அடுத்து, மூடும் நிலையில் இருந்த டி.ஆர்.பஜார் மற்றும் கிளென் மார்க்கன் கேம்ப் நடுநிலைப் பள்ளிகள், இந்திரா நகர் தொடக்கப் பள்ளி ஆகியவற்றையும் காப்பாற்றினார்.

தற்போது, ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் ஷோபா அவர்கள், 2015ம் ஆண்டு, இப்பள்ளியில் பொறுப்பேற்றபோது, மாணவர் எண்ணிக்கை வெறும் 18ஆக இருந்ததால், மூட வேண்டிய நிலையில் பள்ளி இருந்தது. ஒரே ஆண்டில், ஷோபா அவர்கள், மாணவர் எண்ணிக்கையை 138ஆக உயர்த்தினார்.

ஷோபா அவர்களுடன் ஏனைய ஆசிரியர்களும் இணைந்து, பள்ளியில், மூலிகை, ரோஜா, காய்கனித் தோட்டங்கள், மண்புழு உரம் தயாரிப்புக் கூடம் ஆகியவற்றை அமைத்துள்ளனர். இதனால் பசுமையும் தூய்மையுமாய் இருக்கிறது பள்ளி.

மேலும் மாணவர்களுக்கு யோகா, கராத்தே, கர்நாடக இசை, ஆங்கிலத்தில் பேசுதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், தினமும் ஊட்டச்சத்து பாலும் கிடைக்கிறது. இத்தனை தொழில்நுட்ப வசதிகளுடன் இப்பள்ளி இயங்கிவருவதற்காக, புதுமைப் பள்ளி விருதுக்கு இப்பள்ளியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2015-16 ஆண்டின் நல்லாசிரியர் விருது, எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் சிபிஆர் (CPR) சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் சுற்றுச்சூழல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் ஷோபா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.