2018-04-16 16:25:00

உயிர்ப்பின் மகிழ்வால் ஆட்கொள்ளப்படுவோம்


ஏப்.,16,2018. உரோமின் ஆயர் என்ற முறையில் உரோம் நகரின் மேற்கு பகுதியிலுள்ள திருச்சிலுவையின் புனித பவுல் பங்குதளத்தில் மேய்ப்புப்பணி சந்திப்பை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்பின் மகிழ்வால் ஒவ்வொருவரும் வழிநடத்தப்பட்டவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இயேசுவின் உயிர்ப்பு கொணர்ந்துள்ள, அளவு கடந்த மகிழ்வால் நாம் மாற்றம் பெறவேண்டும், ஏனெனில் இந்த மகிழ்வு, நம் பாவங்களை வென்று, புதுப்பித்தலை வழங்கி, நம் இதயங்களை இளமையானதாக மாற்றுகிறது என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, உயிர்த்த இயேசு தஙகள் முன் தோன்றியபோது, நம்பமுடியாமல்  சீடர்கள் சந்தேகம் கொண்டாலும், அவர் உயிர்த்துவிட்டார் என்பதை, மகதலாவின் மரியா, புனித பேதுரு, மற்றும், எம்மாவுஸ் சீடர்கள் வழியாக  அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர் என்றார்.

அவர்களுக்கு தெரிந்த உண்மையை, அவர்கள் இதயத்திற்கு எடுத்துச்செல்லாமல் இருந்ததால், இயேசுவைக் கண்டதும் சந்தேகம் துளிர்விட்டது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு உயிர்த்தார், இன்றும் உயிருடன் இருக்கிறார் என்பதை விசுவசிப்பதற்குத் தேவையான அருளை இறைவனிடம் வேண்டுவோம் எனக்கூறி தன் மறையுரையை நிறைவுச் செய்தார்.

திருச்சிலுவையின் புனித பவுல் பங்குதளத்தில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு முன்னர், இளைஞர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்த திருத்தந்தை, அப்பங்குதளத்தின் குழந்தைகளையும், முதியோரையும் சந்தித்து உரையாடியபின், விசுவாசிகள் சிலருக்கு ஒப்புரவு அருளடையாளத்தையும் நிறைவேற்றினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.