2018-04-14 14:41:00

பிரேசில் ஆயர்கள் திருத்தந்தைக்கு நன்றிக் கடிதம்


ஏப்.14,2018. அன்பில் வாழ்வது, நாம் ஆற்றும் ஒவ்வொன்றிலும் சான்று பகர்வது ஆகிய இவற்றின் வழியாக புனிதமாக இருப்பதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியானது.

“Gaudete et Exsultate” அதாவது மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் என்ற தலைப்பில், ஏப்ரல் 09, இத்திங்களன்று, திருத்தூது அறிவுரை மடல் ஒன்றை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளிலிருந்து தன் டுவிட்டரில், புனிதத்துவத்திற்கு அழைப்பு விடுக்கும் கூற்றுக்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும், தங்களின் 56வது பொதுப் பேரவையைத் தொடங்கியுள்ள பிரேசில் கத்தோலிக்க ஆயர்கள், இப்பேரவையில் தாங்கள் கலந்துரையாடவிருக்கும் தலைப்புகள் பற்றிய விவரங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கடிதம் வழியாகத் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 12, இவ்வியாழனன்று, பிரேசில் நாட்டின் அபரெசிதா அன்னை மரியா திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றி, இப்போதுப் பேரவையை ஆரம்பித்துள்ள ஆயர்கள், திருத்தந்தையுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளனர்.

இன்றைய உலகில் புனிதத்துவத்திற்கு அழைப்பு விடுக்கும் திருத்தூது அறிவுரை மடலை திருத்தந்தை வெளியிட்டுள்ளதற்காக நன்றி தெரிவித்துள்ள பிரேசில் ஆயர்கள், நன்மைத்தன பாதையில் நடக்கவும், அன்றாட வாழ்வில் புனிதத்துவத்தில் வாழ்வதற்குரிய தாகத்தில் நிலைத்திருக்கவும், மேய்ப்பர்களாகிய தங்களுக்கு, இம்மடல் உதவியாக உள்ளது என்று பாராட்டியுள்ளனர். பிரேசில் ஆயர்களின் இப்பேரவை, ஏப்ரல் 20ம் தேதி நிறைவடையும்.

1952ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரேசில் ஆயர் பேரவை, ஏறத்தாழ 370 உறுப்பினர்களைக் கொண்டு, உலகின் மூன்று பெரிய ஆயர் பேரவைகளில் ஒன்றாக விளங்குகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.