2018-04-14 14:56:00

காங்கோ சனநாயக நாட்டில் காரித்தாசின் பணிகள்


ஏப்.13,2018.  காங்கோ சனநாயக நாட்டில் துன்புறும் மக்களுக்கு, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் ஆற்றிவரும் பணிகளை, மனிதாபினம் பற்றிய ஐ.நா. கருத்தரங்கில் விளக்கினார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகம், காங்கோ சனநாயக நாடு குறித்து ஏற்பாடு செய்த, மனிதாபினம் பற்றிய கருத்தரங்கில், இவ்வெள்ளிக்கிழமையன்று உரையாற்றிய, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிப்பொதுச்செயலர், பேரருள்திரு அந்துவான் கமிலேரி அவர்கள், காங்கோ சனநாயக நாட்டிற்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை வலியுறுத்திப் பேசினார்.

உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம், மறைமாவட்ட காரித்தாஸ் நிறுவனங்கள் வழியாக, அவசரகால நிலையிலுள்ள ஏறத்தாழ 7 இலட்சத்து 90 ஆயிரம் மக்களுக்கு உதவியிருக்கின்றது என்றும், இதுதவிர, அந்நாட்டின் நலவாழ்வு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு, பத்து கோடிக்கு மேற்பட்ட டாலரை ஒதுக்கியுள்ளது என்றும் எடுத்துரைத்தார், பேரருள்திரு கமிலேரி.

காங்கோ சனநாயக நாட்டின் Grand Kasai, Tanganika,South Kivu ஆகிய பகுதிகளில் தற்போது நிலவும், மனிதாபிமான நெருக்கடிகளைக் களைவதற்கென, 3 கோடியே 19 இலட்சம் டாலரையும், கத்தோலிக்க திருஅவையின் உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் ஒதுக்கியுள்ளது எனவும், ஐ.நா. கருத்தரங்கில் விவரித்தார், பேரருள்திரு கமிலேரி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.