2018-04-13 15:12:00

புனிதத்துவம், வாழ்வின் சிறு நிகழ்வுகள் வழியாக வளர்கிறது


ஏப்.13,2018. புனிதத்துவம், ஒவ்வொரு நாள் வாழ்வின் சிறு நிகழ்வுகள் வழியாக வளர்கிறது என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 09, இத்திங்களன்று, மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் என்ற தலைப்பில், திருத்தூது அறிவுரை மடலை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரத்தில் தன் டுவிட்டர் செய்திகளில், அன்றாட வாழ்வில், புனிதத்துவத்திற்கு இறைவன் அழைப்பு விடுப்பது குறித்த வார்த்தைகளைப் பதிவு செய்து வருகிறார்.

மேலும், அமேசான் பகுதி ஆயர்களின் சிறப்பு மன்றத்திற்கு தயாரிப்பாக, இவ்வியாழனன்று வத்திக்கானில் ஆரம்பித்த கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமை வகித்து, தொடக்கவுரையும் ஆற்றினார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய, உலக ஆயர்கள் மாமன்றச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திசேரி அவர்கள், அமேசான், ஒரு தோட்டமாக, அளப்பரிய செல்வங்களையும், இயற்கை வளங்களையும் கொண்டிருக்கின்றது, ஆனால் இந்த நிலம், உலகின் வலிமைமிக்க பகுதியால் ஆக்ரமிக்கப்பட்டு, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று கவலை தெரிவித்தார்.

பூர்வீக மக்களின் அன்னை நிலமான அமேசான், அம்மக்களின் வரலாற்றையும், ஏனைய வளங்களையும் கொண்டுள்ளது, ஆனால் இந்நிலம், கட்டுப்பாடின்றி சுரண்டப்படுகின்றது என்றும் கூறினார், கர்தினால் பால்திசேரி.     

அமேசான் பகுதி ஆயர் மன்றத்தின் 18 உறுப்பினர்களும், அப்பகுதி குறித்த 13 வல்லுனர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.