2018-04-13 15:29:00

உலக சக்திகள் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்


ஏப்.13,2018. மத்திய கிழக்கில், குறிப்பாக சிரியாவில், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், இரஷ்யாவுக்கும் இடையே ஆயுத மோதல்கள் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகரித்து வரும்வேளை, மத்திய கிழக்கில் அமைதியை நிலைநிறுத்த, உலகளாவியத் தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, அப்பகுதியின் கத்தோலிக்கத் தலைவர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிரியா நாட்டில் புரட்சியாளர்கள் ஆக்ரமிப்பிலுள்ள கிழக்கு கூட்டா பகுதியில், வேதியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், கடும் பழிக்குப்பழி தாக்குதல்களை நடத்தவிருப்பதாக அச்சுறுத்தி வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் தொடர்ந்து விடுத்துவரும் அச்சுறுத்தல், இரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து எதிர்தாக்குதலைத் தூண்டும் என்று செய்திகள் கணித்துள்ளன.

இதையொட்டி உலகளாவிய சமுதாயத்திற்கும், வல்லமைமிக்க உலகத் தலைவர்களின் மனசாட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள, லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை பெஷாரா பூத்ரோஸ் ராய் அவர்கள், தூதரக கலந்துரையாடல் வழியாக, போர்களை நிறுத்தி, அமைதியைக் கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில், மக்கள் அமைதியில் வாழ்வதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றனர் என்றும், போர் எவ்வாறு தொடங்கியது என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் அது எவ்வாறு முடியும் என்பது தெரியவில்லை எனவும், முதுபெரும்தந்தை ராய் அவர்கள், கூறியுள்ளார். 

சிரியா மக்களின் நிலைமை குறித்து மிகவும் கவலையடையும்வேளை, அந்நிலைமை,  லெபனான் நாட்டை, குறிப்பாக, பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது என்று, உலகளாவிய சமுதாயத்திற்கு எழுப்பியுள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார், முதுபெரும்தந்தை ராய்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.