2018-04-12 15:36:00

செபம் இன்றி புனிதத்துவம் இல்லை – திருத்தந்தையின் டுவிட்டர்


ஏப்.12,2018. "செபம், மற்றும், இறைவனுடன் ஒன்றிப்பு என்ற மனநிலையே, புனிதர்களை, தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்துகின்றன. செபம் இன்றி புனிதத்துவம் இல்லை" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியிட்டார்.

மேலும், மின்சக்தியால் இயங்கும் Formula E பந்தயக் கார் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று ஆசீர்வதித்தார்.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரை, இப்புதன் காலை, தன் புதன் மறைக்கல்வி உரைக்கு முன்னதாக திருத்தந்தை ஆசீர்வதித்து, இதனை உருவாக்கியவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் கொண்டு, மின்சக்தியால் இயங்கும் பந்தயக் கார்கள் மட்டும் பங்கேற்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Formula E பந்தயங்கள், 'மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பந்தயம்" (“racing reinvented”) என்ற பெயரில் நடத்தப்படுகின்றன.

இதற்கிடையே, இத்தாலியின் பிளாரன்ஸ் நகரிலிருந்து, "யாரும் அந்நியர் இல்லை" என்ற விளம்பரப் பதாகையைத் தாங்கி வந்திருந்த 20க்கும் அதிகமான இளம் குடிபெயர்ந்தோர் குழுவை, ஏப்ரல் 11, இப்புதன் மறைக்கல்வி உரைக்குப்பின், திருத்தந்தை சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.