2018-04-11 15:24:00

விபத்தில் இறந்த குழந்தைகளுக்காக இந்திய ஆயர்களின் அனுதாபம்


ஏப்.11,2018. இந்தியாவின் இமாலய மலைப்பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக இந்திய ஆயர் பேரவை தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 9, இத்திங்களன்று, இமாச்சல பிரதேச மாநிலத்தின் நுர்பூர் (Nurpur) என்ற இடத்தில், 40 குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, ஏறத்தாழ 330 அடி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால், பயணம் செய்த 30க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

இந்த விபத்தைக் குறித்து, வத்திக்கான் வானொலிக்கு பேட்டியளித்த, இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியடோர் மாஸ்கரீனஸ் அவர்கள், சரியாகப் பராமரிக்கப்படாத சாலைகள், சாலை விதி முறைகளை மீறுதல் ஆகிய காரணங்களால் பெருமளவு உயிர்கள் இந்தியாவில் பலியாகின்றன என்று கூறினார்.

குழந்தைகளின் மரணம், இந்திய ஆயர்களுக்கு பெரும் வேதனையைத் தந்துள்ளது என்று கூறிய ஆயர் மாஸ்கரீனஸ் அவர்கள், இக்குழந்தைகளைப் பறிகொடுத்துள்ள பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், தங்கள் அனுதாபங்களையும், செபங்களையும், பேரவை சார்பாகத் தெரிவிப்பதாகக் கூறினார்.

அடிபட்ட குழந்தைகளில் பலர், சரியான, உடனடியான மருத்துவ உதவிகள் கிடைக்காததால் உயிரிழந்துள்ளனர் என்பதை தன் பேட்டியில் குறிப்பிட்ட, ஆயர் மாஸ்கரீனஸ் அவர்கள், இந்தியாவின் பல பகுதிகளில் நிலவும் பரிதாபமான மருத்துவ பராமரிப்பைக் குறித்து தன் வேதனையை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.