2018-04-11 14:47:00

ஏப்ரல், மே மாதங்களில், திருத்தந்தையின் வழிபாட்டு நிகழ்வுகள்


ஏப்.11,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களில், தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகளை, திருப்பீட வழிபாட்டுத் துறை இப்புதனன்று வெளியிட்டுள்ளது.

பாஸ்காக் காலத்தின் 4ம் ஞாயிறு, மற்றும், நல்லாயன் ஞாயிறு ஆகியவை இணைந்து சிறப்பிக்கப்படும் ஏப்ரல் 22ம் தேதி காலை 9.15 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலியில், உரோம் மறைமாவட்டத்தையும், இன்னும் உலகில் பிற பகுதிகளையும் சார்ந்த குருத்துவ மாணவர்களை, அருள் பணியாளர்களாக அருள்பொழிவு செய்துவைப்பார்.

அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தின் முதல் நாள், செவ்வாயன்று, உரோம் நகருக்கு அருகே அமைந்துள்ள 'Divino Amore' அதாவது, 'தெய்வீக அன்பு' என்ற திருத்தலத்திற்கு, மாலை 5 மணிக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு, செபமாலை பக்தி முயற்சியை முன்னின்று நடத்துவார்.

மே மாதம் 19ம் தேதி, சனிக்கிழமை நடைபெறும் கர்தினால்கள் அவை கூட்டத்தில், பல்வேறு புனிதர்பட்ட நிலைகள் குறித்த அறிக்கையை திருத்தந்தை வெளியிடுவார்.

மே 20, ஞாயிறு கொண்டாடப்படும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவையொட்டி, காலை 10 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலியை தலைமையேற்று நடத்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.