2018-04-10 14:54:00

விவிலியத்தேடல் : புதுமைகள் – அரச அலுவலர் மகன் குணமடைதல் - 2


யோவான் நற்செய்தியில், காணப்படும் ‘அரச அலுவலர் மகனை இயேசு குணமாக்கியப் புதுமை’யில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. யோவான் நற்செய்தி, 4ம் பிரிவில், 46 முதல் 54 முடிய உள்ள 9 இறைவாக்கியங்களில், அரச அலுவலர் மகனை இயேசு குணமாக்கியப் புதுமை விவரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, 4ம் பிரிவின், துவக்கத்தில், 5ம் இறைவாக்கியம் முதல், 42ம் இறைவாக்கியம் முடிய, சமாரியாவின் சிக்கார் என்ற ஊரில், இயேசுவுக்கு கிடைத்த வரவேற்பும், அவர் மீது, சமாரியர் கொண்ட விசுவாசமும் விவரிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, அரச அலுவலர் மகனை இயேசு குணமாக்கியப் புதுமையைக் கூறுவதற்கு முன்னதாக, நற்செய்தியாளர் யோவான் பதிவு செய்துள்ள 4 இறைவாக்கியங்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன.

யோவான் 4:43-46

அந்த இரண்டு நாளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர். கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார்.

இரண்டு நாள்களாக, சமாரிய மக்கள் தந்த வரவேற்பிலும், அவர்களிடம் காணப்பட்ட நம்பிக்கையிலும் நிறைவுகண்ட இயேசு, கலிலேயாவில் காலடி பதிக்கிறார். தான் வளர்ந்த ஊரான நாசரேத்தை உள்ளடக்கிய கலிலேயா பகுதியில், இயேசு, 30 ஆண்டுகள் வாழ்ந்தவர். அப்பகுதியில் காலடி வைத்ததும், இயேசுவின் உள்ளத்தில், 'தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது' என்ற எண்ணம் மேலோங்கியது.

வலிமை மிக்க இந்தக் கூற்று, கிறிஸ்தவ வழிபாடுகளில் மட்டுமல்லாமல், வெளி உலகில், கிறிஸ்தவர் அல்லாதோரும் பயன்படுத்தும் பொருள் மிகுந்த ஒரு கூற்றாக விளங்குகிறது. முற்சார்பு எண்ணங்களுடன் ஒருவரைப்பற்றி முடிவெடுத்தல், மற்றும், இறைவாக்கினராக வாழ்வதால் ஒருவர் சந்திக்கும் எதிர்ப்புக்கள், என்ற இரு கோணங்களில் இந்த கூற்றை சிந்திக்க முயல்வோம்.

யோவான், தன் நற்செய்தியின் அறிமுகப்பகுதியிலேயே இந்த எண்ணத்தை வேறு சொற்களில் வெளிப்படுத்தியுள்ளார். வாக்காக, ஒளியாக, இயேசு இவ்வுலகிற்கு வந்தபோது, இவ்வுலகம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கூற, அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. (யோவான் 1:11) என்ற சொற்களை யோவான் பயன்படுத்தினார். இப்போது, 4ம் பிரிவில், யோவான் மீண்டும் அதே எண்ணத்தைப் பதிவு செய்துள்ளார்.

தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார் (யோவான் 4:44) என, நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டிருந்தாலும், எப்போது இயேசு இதைக் கூறினார் என்பதைக் குறிப்பிடவில்லை. இந்த விவரத்தை, ஒத்தமை நற்செய்தியாளர்கள், மத்தேயு, மாற்கு, மற்றும், லூக்கா ஆகிய மூவரும் பதிவு செய்துள்ளனர். (மத். 13:57, மாற். 6:4, லூக். 4:24)

இயேசு, தம் சொந்த ஊரில், தொழுகைக்கூடத்தில் போதித்து, புதுமைகள் செய்தபோது, இயேசுவின் போதனைகளில் வெளிப்பட்ட ஞானத்தையும், அவரது செயல்களில் காணப்பட்ட வல்லமையையும் கண்ட மக்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?" (மத்தேயு 13: 54-56) என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக்கொண்டே சென்றனர். மக்கள் எழுப்பிய இக்கேள்விகளை ஆய்வுசெய்தால், நாம் பிறர்மீது கொண்டிருக்கும் கருத்துக்கள் எவ்வகையான முற்சார்பு எண்ணங்களிலிருந்து பிறக்கின்றன என்பது விளங்கும்.

இயேசுவின் குடும்பத் தொழில், தந்தை, தாய், சகோதரர், சகோதரிகள் ஆகியோரின் அடையாளம் ஆகியவற்றை நாசரேத்து மக்கள் அறிந்திருந்ததால், இயேசுவை வேறு கோணத்தில் அவர்களால் காண முடியவில்லை. அவர்கள் கொண்டிருந்த முற்சார்பு எண்ணங்கள், அவர்களது நம்பிக்கைக்கு முட்டுக்கட்டைகளாக இருந்தன. இன்றும், நம்மிடையே இத்தகைய எண்ண ஓட்டங்கள் நிலவுவதை நாம் அறிவோம். ஒருவர் பிறந்த ஊர், அவரது குடும்பத் தொழில், தாய், தந்தை, குடும்பத்தினர் ஆகியோரைப்பற்றிய அறிவு ஆகிய விவரங்கள், நமக்குள் உருவாக்கும் முற்சார்பு எண்ணங்கள், நம் உள்ளங்களை ஊனமாக்குகின்றன.

"தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது" (யோவான் 4:44) என்று, இயேசு கூறும் சொற்கள், இறைவாக்கினராக வாழ்வதால் ஒருவர் சந்திக்கும் எதிர்ப்புக்களைச் சிந்திக்க உதவுகின்றன. இயேசு, இறைவாக்கினராக வாழ்ந்ததால், மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இறைவாக்கினரின் முக்கியப் பணி, ஒளிவு மறைவு ஏதுமின்றி, மக்களிடம் உண்மைகளை எடுத்துரைப்பது. நாசரேத்து தொழுகைக்கூடத்தில் இயேசு கூறிய கசப்பான உண்மைகளைக் கேட்ட அம்மக்கள், "ஓ, இவரைத் தெரியாதா! இவர் குடும்பத்தைத் தெரியாதா!" என்ற பாணியில் சிந்தித்ததால், பேசியதால், அவர்கள் தங்கள் உள்ளங்களை மூடிவிட்டனர்.

முற்சார்பு எண்ணங்களால், மக்கள் அவரைப் புறக்கணித்தனர் என்று கூறும் மத்தேயு, அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்கு பல வல்ல செயல்களைச் செய்யவில்லை (மத். 13:58) என்று, தொழுகைக்கூட நிகழ்வை நிறைவு செய்துள்ளார். இதையொத்த கருத்தை, நற்செய்தியாளர் மாற்கும் பதிவு செய்துள்ளார். நற்செய்தியாளர் லூக்காவோ இன்னும் ஒரு படி மேலேச் சென்று, தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார் (லூக்கா 4:28-29) என்று கூறியுள்ளார்.

அன்று போலவே, இன்றும், இறைவாக்கினர்கள், சமுதாயத்தால், குறிப்பாக, அதிகாரம் கொண்ட அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படாமல், சவால்களைச் சந்தித்து வருகின்றனர். 20 மற்றும் 21ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்துவரும் இறைவாக்கினர்களில் ஒருவர், டேனியல் பெர்ரிகன் (Daniel Berrigan). அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்து, இயேசு சபை துறவியாக வாழ்ந்த பெர்ரிகன் அவர்கள், உலக அமைதிக்காகவும், சமுதாய நீதிக்காகவும் உழைத்தவர். 1960களில் வியட்நாம் போரில் அமெரிக்க அரசு, அந்நாட்டில், அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததை எதிர்த்து, அருள்பணி பெர்ரிகன் அவர்கள், ஓர் இறைவாக்கினருக்குரிய ஆர்வத்துடன், உண்மைக்குக் குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

1960களில் துவங்கிய இவரது போராட்டங்கள், அணு ஆயுதங்களுக்கு எதிராக பல ஆண்டுகள் தொடர்ந்தன. பேராசிரியராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றிய அருள்பணி டேனியல் பெர்ரிகன் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக, பலமுறை சிறையிலடைக்கப்பட்டார்.

இறைவாக்கினருக்குரிய துணிவுடன் போராடிய பெர்ரிகன் அவர்களால் தூண்டப்பட்டு, பல இளையோர், குறிப்பாக, பல இளம் துறவிகள், அநீதமான அரசுகளை எதிர்த்தும், சமுதாய நீதிக்காகவும், போராட, அவரைப்போல முன்வந்தனர்.

போராட்டங்களில் ஈடுபட முன்வரும் இளையோரிடம் பெர்ரிகன் அவர்கள் கூறிய அறிவுரை இதுதான்: "இந்தப் போராட்டம், சிறைவாசம் ஆகியவற்றால், நீங்கள் இன்னும் கோபத்திற்கும், வெறுப்புக்கும் உள்ளாகப்போவதாக உணர்ந்தால், தயவுசெய்து உங்கள் போராட்டத்தைக் கைவிடுங்கள்."

அருள்பணி டேனியல் பெர்ரிகன் அவர்களின் அறிவுரைக்குச் செவிமடுத்து, எத்தனையோ இளையோர், வெறுப்பையும், கோபத்தையும் வென்று, உண்மையான சமுதாய அக்கறையுடன் போராளிகளாக மாறியுள்ளனர். இறைவாக்கினர்களாக வாழ்ந்த அவர்களில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இறைவாக்கினராக செயலாற்றியதால், கலிலேய மக்களிடமிருந்து இயேசு உணர்ந்த எதிர்ப்பு உணர்வுகளுக்கு எதிர் துருவமாக அமைந்திருந்தது, சமாரியர்கள் இயேசுவுக்கு வழங்கிய வரவேற்பு. அரும் அடையாளம் எதுவுமே செய்யாத இயேசு, அம்மக்களுக்கு கூறிய வார்த்தைகள், அவரிடம் நம்பிக்கையை வளர்த்தன. அவர் கூறிய வார்த்தைகள், மகிழ்வூட்டும், இனிப்பான வார்த்தைகளாக மட்டும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வார்த்தைகளில் கசப்பான உண்மைகளும் கலந்திருந்தன. கிணற்றடியில் சந்தித்த பெண்ணுக்கு, ஐந்து கணவர்கள் இருந்தனர் (யோவான் 4:18) என்ற கசப்பான உண்மையை அப்பெண்ணிடம் இயேசு கூறியதுபோலவே, ஊர் மக்களிடமும் இயேசு கசப்பான உண்மைகளைச் சொல்லியிருப்பார். எனினும், அந்த உண்மைகளை, தகுந்த கண்ணோட்டத்துடன் ஏற்றுக்கொண்டு, அவர்கள் இயேசுவை நம்புவதற்குத் தயாராக இருந்தனர். அவரை உலகின் மீட்பர் என்றும் ஏற்றுக்கொண்டனர் (யோவான் 4:42).

தனக்கு சரியான வரவேற்பு கிடைக்காது என்று எதிர்பார்த்து கலிலேயா வந்த இயேசுவுக்கு, ஓர் ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. கலிலேய மக்கள் இயேசுவை வரவேற்றனர் என்று யோவான் குறிப்பிட்டுள்ளார். அந்த வரவேற்பிற்கு காரணம் என்ன என்பதையும் யோவான் உடனே இணைத்துள்ளார். "இயேசு கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்." (யோவான் 4:45)

அரும் அடையாளங்கள் தங்கள் நடுவிலும் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன், கலிலேய மக்கள், இயேசுவை வரவேற்ற அவ்வேளையில், அரச அலுவலர் ஒருவர் இயேசுவைத் தேடிவந்தார். இதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்ததை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.