2018-04-10 15:28:00

புனிதத்துவத்தில் வாழ்வதென்பது இதயத்தில் ஏழ்மையாக இருப்பது


ஏப்.10,2018. இதயத்தில் ஏழ்மையாக இருப்பது, கனிவோடும், தாழ்மையோடும் செயல்படுவது, பிறரோடு சேர்ந்து கண்ணீர் சிந்தத் தெரிந்திருப்பது, நீதிக்காகப் பசிதாகம் கொண்டிருப்பது, இரக்கத்துடன் பார்த்துச் செயல்படுவது ஆகிய எல்லாமே புனிதத்துவம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில் இச்செவ்வாயன்று பதிவு செய்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ‘Gaudete et Exsultate’ அதாவது ‘மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்’ என்ற திருத்தூது அறிவுரை, ஏப்ரல் 09, இத்திங்களன்று வெளியிடப்பட்டுள்ளவேளை, இந்த அறிவுரையையொட்டி, டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை, இச்செவ்வாயன்று வெளியிட்ட முதல் டுவிட்டரில்,  இதயத்தில் ஏழ்மையாக இருப்பதன் பொருளை விளக்கியுள்ளார்.

மேலும், திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டரில், அன்பைக் கறைப்படுத்தும் அனைத்தினின்றும் இதயத்தைச் சுதந்திரமாக வைத்துக்கொள்வது, நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் அமைதியை விதைப்பது, நமக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும்கூட, நற்செய்தியின் பாதையை ஒவ்வொரு நாளும் ஏற்றுக்கொள்வது  ஆகியவை புனிதத்துவம் என்று கூறியுள்ளார்.

இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ‘மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்’ என்ற திருத்தூது அறிவுரை பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்,  

நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளின் போராட்டங்கள் வழியாக, புனிதத்துவத்தை எவ்வாறு அடையலாம் என்பதை திருத்தந்தை விளக்கியுள்ளார் எனப் பாராட்டியுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால், டானியேல் தினார்தோ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வெளியீட்டுக்காகத் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், ஒவ்வொரு கிறிஸ்தவரும் எவ்வாறு இருக்க வேண்டுமென்று  கடவுள் விரும்புகின்றாரோ, அதை ஏற்று, அதற்குத் திறந்த மனதுள்ளவர்களாய் வாழ்வதற்கு, இந்த அறிவுரை அழைப்பு விடுக்கின்றது எனக் கூறியுள்ளார்.

ஆதாரம் : Zenit/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.