2018-04-10 15:19:00

உலகின் பாலைநிலத்தில் கிறிஸ்துவின் சிலுவையை உயர்த்துங்கள்


ஏப்.10,2018. ஏப்ரல் 7, கடந்த சனிக்கிழமை முதல், ஏப்ரல் 10, இச்செவ்வாய் வரை, வத்திக்கானில், புதிய வழியில் நற்செய்தி அறிவிக்கும் திருப்பீட அவை நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறத்தாழ 550 அருள்பணியாளர்களுக்கு, இச்செவ்வாய் நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரையும் ஆற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் மறைப்பணியாளர்கள், தூய ஆவியாரின் வல்லமைக்குப் பணிந்து நடப்பவர்களாய் வாழுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்த உலகத்திற்கு இரக்கம் தேவைப்படுகின்றது, அதன் வழியாக, பிரிவினைகளுக்குக் காரணமான தீமையின் செயல்களை முறியடிக்கும் ஒற்றுமை உருவாகும் என்று கூறினார்.

இரக்கத்தின் மறைப்பணியாளர்கள், அருள்பணியாளர் கூட்டமாக இருப்பது என்பதல்ல, மாறாக, அவர்கள் தூய ஆவியாரால் தூண்டப்பட்டவர்களாய் இருக்க வேண்டுமென்று, இந்நாளின் திருப்பலி வாசகங்களை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, சொந்த வாழ்வில் மீண்டும் பிறப்பது, குழு வாழ்வு ஆகிய இரண்டும் ஒன்றிலிருந்து மற்றதை பிரிக்க முடியாத இரு கூறுகள் என்று கூறினார்.

உலகின் பாலைநிலத்தில் கிறிஸ்துவின் சிலுவையை உயர்த்துகின்றவர்களாக நாம் செயல்பட வேண்டும் என்றும், ஆண்டவருக்கு உயிருள்ள சான்றுகளாக வாழ்வது, ஒன்றிப்பை மட்டுமல்ல, வெளியில் வாழ்பவரைக் கவர்ந்திழுக்கும் வாழ்வாக அமையும் என்றும் திருத்தந்தை கூறினார்.

இன்றைய உலகுக்கும், திருஅவைக்கும், இரக்கம் சிறப்பாகத் தேவைப்படுகின்றது எனவும், இரக்கமின்றி, வாழ்வு மற்றும் வரலாற்றில் ஒன்றிப்பின் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதற்கு வலிமை கிடைக்காது எனவும் கூறியத் திருத்தந்தை, இரக்கத்தின் மறைப்பணியாளர்கள், முதலில் தூய ஆவியாரால் மறுபிறப்பு அடைந்து, மேலே உயர்த்தப்பட்ட இயேசுவின் சான்றுகளாக தங்கள் பணியில் உறுதிபெற வேண்டும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.