2018-04-10 15:11:00

இரக்கத்தின் மறைப்பணியாளர்களின் பணி மதிப்புமிக்கது


ஏப்.10,2018. இரக்கத்தின் மறைப்பணியாளர்கள், திருஅவைக்கு மிகவும் தேவைப்படும் பணியை ஆற்றுகின்றனர் என்று, அவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், உலகெங்கும் அனுப்பி வைக்கப்பட்ட, இரக்கத்தின் மறைப்பணியாளர்களுக்கென, புதிய வழியில் நற்செய்தி அறிவிக்கும் திருப்பீட அவை நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறத்தாழ 550 அருள்பணியாளர்களை இச்செவ்வாயன்று, வத்திக்கானின் ரெஜியா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

இரக்கத்தின் மறைப்பணியாளர்கள், யூபிலி ஆண்டில் மறைப்பணியாற்றுவதற்கென நியமிக்கப்பட்டாலும், அந்த ஆண்டில் இடம்பெற்ற, ஏராளமான மனமாற்றங்களின் சாட்சியங்களை அறிந்த பின்னர், அப்பணியாளர்களைத் தொடர்ந்து அப்பணியில் ஈடுபட வைக்கும் எண்ணம் வந்தது என்றும் திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்தவப் பாதை, கற்களின் மீது தடுமாற்றம் அடையச் செய்யும் மற்றும் வாழைப்பழத்தோலில் சறுக்கிவிழச் செய்யும் கடினமான பாதை என்று எச்சரித்த திருத்தந்தை, இரக்கத்தின் பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளவர்களின் வாழ்வு மேலும் சிறப்படையவும், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிக்கு ஆதரவாகவும், சிந்தனைகளை வழங்குவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

தம் மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் செய்தியை உலகுக்கு எடுத்துச் செல்லும் மக்கள்,  கடவுளுக்குத் தேவைப்படுகின்றனர் எனவும், இயேசு, தாம் உயிர்த்த நாளின் மாலையில் திருத்தூதர்களுக்கு, இப்பணியையே அளித்தார் எனவும் உரைத்த திருத்தந்தை, இரக்கத்திற்கு ஒத்துழைப்பாளர்களாக இருப்பது, நாம் முதலில் பெற்றுள்ள இரக்கத்தின் அன்பை வாழ்வதாகும் என்று கூறினார்.

மேலும், இரக்கத்தின் மறைப்பணியாளர்களுக்கு சில நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கிய திருத்தந்தை, ஒருவர் தன் பாவங்களுக்காக மனம் வருந்தி ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற வரும்போது, கடவுளின் அருள் ஏற்கனவே அவரில் வேலை செய்கின்றது என்பதை நினைவில் இருத்த வேண்டும் என்றும் கூறினார்.

முதலில் கடவுள் செயல்படுகிறார், இரண்டாவதாக அருள்பணியாளரின் பணி செயல்படுகின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் மறைப்பணியாளர்கள், வாழ்வின் ஊற்றாகிய கடவுளோடு ஒன்றித்து வாழ வேண்டுமென்றும், இந்த அனுபவத்திற்குச் சாட்சி பகர வேண்டுமென்றும், பாரபட்சமின்றி எல்லாரையும் ஏற்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.