2018-04-09 14:55:00

வாரம் ஓர் அலசல்–நிழலில் ஒதுங்க மரம், தாகம் தணிக்க தண்ணீர்


ஏப்.09,2018. தண்ணீர்! இது, இயற்கையின் பொதுநிலை. மனிதரின் அடிப்படை உரிமை. தண்ணீர் உல‌கின் முக்கால் பாக‌மாக இருந்தும், அது கிடைக்க‌வில்லை என்றுதான் உல‌க‌மே அழுகிற‌து. இக்காலத்தில், உலகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. உலகில் பல பகுதிகளில் வறட்சி, தண்ணீர் பஞ்சம். மேலும் பல பகுதிகளில் கடும் வெள்ளம். உலகின் சில இடங்களில் இடம்பெறும் கடும் குண்டுவீச்சுகளால், புவிமண்டலம் கரும்புகையாக காட்சியளித்து, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கின்றது. சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கிழக்கு கவுடா பகுதியில்  வேதிய வாயுவை செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும், ஆயிரக்கணக்கானோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், சிரியாவின் Tiyas  இராணுவ விமானத்தளம் இத்திங்களன்று ஏவுகணையால் தாக்கப்பட்டதில் பலர் உயிரிழந்துள்ளனர் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும், மீத்தேன், ஹைரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட வேண்டும், அணு உலை மூடப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகமெங்கும் மக்கள் பெருந்திரளாகப் போராடி வருகின்றனர். தமிழகத்தில் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், மதுரையில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே, நான்கு நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தண்ணீரை விலைகொடுத்து வாங்கி வருகின்றனர் என்பது இத்திங்கள்தின செய்தி. இந்நிலையில், நம் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் இன்றைய நிகழ்ச்சியைத் தொடங்குகின்றோம்.

தமிழ்நாட்டில், தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள பொட்டிபுரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை, கேரளாவில் இருந்து குஜராத் வரை உள்ளது. அப்படியிருக்க, இந்த ஆய்வு மையம், தங்கள் பகுதியில் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தப் பகுதி மக்கள், தேனி மாவட்ட வருவாய் அதிகாரியிடம்,  "இந்த ஆய்வு மையம் அமைந்தால், எங்கள் ஊர்களை காலி செய்து விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும். இந்த மையத்தை எங்கள் பகுதியில் அமைக்க கூடாது என மனு அளித்துள்ளனர். மேலும், இத்திட்டத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து, தேனி அருகே சின்னமனூரில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அக்கூட்டத்தில், ஏப்.07, இச்சனிக்கிழமை இரவில் பேசிய கவிஞர் வைரமுத்து அவர்கள், நியூட்ரினோ பற்றி இவ்வாறு பேசியுள்ளார்

புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் போல நியூட்ரினோ என்பது ஓர் அடிப்படைத் துகள். இப்போது, கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் உங்கள் உடம்புக்குள் புகுந்து உங்களை அறியாமல் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. ஒரு பென்சில் வைக்கிற புள்ளியில், அல்லது தாய் தன் குழந்தையின் கன்னத்தில் வைக்கிற திருஷ்டிப்பொட்டில் இரண்டு இலட்சம் கோடி நியூட்ரினோக்கள் இருக்கின்றன. இந்த அடிப்படைத் துகளைக் கண்டுபிடிக்க முடியாது. இந்த அடிப்படைத் துகளைக் கண்டறிந்தால், பிரபஞ்ச இரகசியத்தைக் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்காகத்தான் அம்பரப்பர் மலை, ஒரு சல்லடையாகப் பயன்பட இருக்கிறது. இந்த மலைச்சல்லடை முதலில் குடையப்படுகிறது. உள்ளே 51 ஆயிரம் டன் இரும்பு மின்காந்த மூட்டப்படுகிறது. இதற்கு எங்கள் மேற்குத்தொடர்ச்சி மலைதான் கிடைத்ததா?  மேற்குத்தொடர்ச்சி மலை, 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. இம்மலை, எட்டுக் கோடி ஆண்டுகளாக இந்த மண்ணுக்கு நீர் கொடுக்கும் தாய், நதிகளை இறக்கிவிட்ட தாய், எங்களுக்குக் கவிதை கொடுத்த கருவூலம் மற்றும், மழையை வானத்திலிருந்து கறந்துகொடுத்த தாய். மேற்குத்தொடர்ச்சி மலை இல்லையென்றால், நாங்கள் ஒரு வறண்ட பாலைவனத்தின் பிள்ளைகளாக இருந்திருப்போம். செவ்வாய் கிரகத்தில் மனிதர் வாழமுடியுமா என யோசிக்கிறீர்களே, இந்தத் திட்டத்தால் அடுத்த ஊரில் மனிதர் வாழ முடியுமா என்று யோசித்தீர்களா? இந்த மண்ணில் வாழ்வதற்கு இடமில்லையென்றால், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து என்ன பயன்? இந்த ஆய்வுத் திட்டத்துக்கு 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதே. இந்தப் பகுதி அணைகளில் 10 மீட்டர் மண் தூர்வார முடியாதா? அப்படிச் செய்தால் எம் மக்களுக்கு நான்கு டி.எம்.சி தண்ணீர் அதிகமாகக் கிடைக்குமே. இராமநாதபுரம் வரை நனையுமே... மதுரையில் தண்ணீர்ப் பஞ்சம் வராதல்லவா? 2050-ல் இந்த உலகம் சந்திக்க விருப்பது மாபெரும் தண்ணீர்ப் பஞ்சம். தண்ணீர் இல்லாததால், தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரை விட்டு எல்லாரும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்தது இங்கே வர எவ்வளவு காலமாகும்? இப்படி இந்த பூமியில் இருக்கும் ஒரு விழுக்காட்டுத் தண்ணீருக்கே மனிதன் கஷ்டப்படும் சூழலில், இரும்பைக் குளிர்விக்க எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதுதான், நியூட்ரினோ திட்டம் குறித்து நாங்கள் வைக்கும் கேள்வி. அடுத்ததாக, வெட்டப்பட்ட பாறைகளையும் புழுதியையும் என்ன செய்வீர்கள்? அந்தப் புழுதிப் படலம் மேற்குத்தொடர்ச்சி மலையின் நான்கில் ஒரு பங்கை மூடிவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதில் ஆயிரம் டன் ஜெலட்டின்களைப் பயன்படுத்தப் போகிறார்கள். இதனால் எத்தனை பறவைகள், உயிரினங்கள் அழியும்? இந்த நியூட்ரினோ திட்டம், நியூட்ரினோ துகள்களைக் கண்டுபிடிப்பதுடன் மட்டும் நின்றுவிடுமா? இந்த மண் எங்களுக்குச் சொந்தம். இந்த மண்ணில் நாங்கள் எதையும் இழப்போம்; ஆனால், மண்ணை இழக்க மாட்டோம்.... இவ்வாறு கவிஞர் வைரமுத்து அவர்கள், நியூட்ரினோ பாதிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பேசியதாக, செய்திகளில் வாசித்தோம்.

காஸ்மிக் கதிர்களில் இருந்து உண்டாகும் நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வு முயற்சி, 1930களில் இருந்து தொடங்கியது. நியூட்ரினோக்கள், இந்தியாவில் முதன் முதலாக, கோலார் தங்க வயல் சுரங்கத்தில், 1965ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இச்சுரங்கங்கள், பதினைந்து ஆண்டுகளுக்குமுன் மூடப்பட்டு விட்டன. எனவே, மீண்டும் இந்த ஆய்வை நடத்துவதற்காக இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல அறிவியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த பாதாள அறிவியல் கூடத்தை அமைக்க முன்வந்துள்ளன. ஏறக்குறைய நூறு அறிவியலாளர்கள் மற்றும், பொறியாளர்கள் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் எனச் செய்திகள் கூறுகின்றன.

தமிழக மக்களில், குறிப்பாக இளையோரில் சமூக விழிப்புணர்வு வீறுடன் காணப்படுகின்றது. மனிதரின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தண்ணீருக்காகப் போராடுகிறோம். அதேநேரம், கிடைக்கும் தண்ணீரைச் சேர்த்து வைக்க நம் முயற்சிகள் என்ன? ஆங்காங்கே இளையோர் இணைந்து தங்கள் கிராமங்களில், குளங்களையும் கண்மாய்களையும் தூர் வார்கிறார்கள். ஊட்டியில் தடுப்பணை கட்டுவதற்கு பிரச்சாரங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இவை விரைவில் செயல்படுத்தப்பட அனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும். இருக்கும் மரங்களை வெட்டிச் சாய்க்காமல், மேலும் மரங்களை நட முயற்சிக்க வேண்டும்.

ஒதுங்க நிழல் வேணும் அதுக்கு மரம் வேணும் எனும் இலக்குடன், கடந்த 12 வருடங்களாக, விழுப்புரத்தையொட்டியுள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வளர்த்திருக்கிறார், பையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை அவர்கள். கடந்த 24 ஆண்டுகளாக வெயிலில் தெருத்தெருவாக அலைந்து துணி வியாபாரம் செய்துவரும் இவர், ஒரு மனிதர் நிழலைத் தேடி அலைவதைவிட வேறு கொடுமை இல்லை என்றும், தான் நிழலைத் தேடி அலைந்ததைப்போல, மற்றவர்கள் அலையக் கூடாது என்ற நோக்கத்துடனும், இச்சேவையை ஆற்றி வருவதாகச் சொல்லியிருக்கிறார்.. ஆற்றோரம், ஏரிக்கரைப் பக்கம், வெயிலுக்கு ஒதுங்க முடியாத இடங்கள் என்று பல பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு வருகிறார். மரங்களை நடுவது மட்டுமன்றி அவற்றுக்கு முள்வேலி அமைப்பது, இரும்புக்கூண்டுக்குள் அமைத்துப் பத்திரப்படுத்துவது, வாடிய செடிகளுக்கு நீர் ஊற்றுவது என, வண்டியில் துணி வியாபாரம் செய்தபடியே  இதையும் செய்கிறார் ஏழுமலை. இத்துடன், கடந்த ஐந்து வருடங்களாகப் பனை விதைகளை நிலங்களில் பதித்து வருகிறார். அதன் சாட்சியாக, இன்று பையூர் சார்ந்த கிராமங்களில் இவர் விதைத்த பனைமரங்கள் நெடுமரங்களாக வளர்ந்திருக்கின்றனவாம். கிடைக்கும் கொஞ்சம் வருமானத்தில், மரக்கன்றுகள் விதைகள் மற்றும், அவற்றின் பராமரிப்புக்கு எனக் குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் ஒதுக்கிவிடுகிறார் இவர். வண்டியில் துணி எடுத்துக் கொண்டு போகும்போது வாடிக்கையாளர்களிடம் மர வளர்ப்பின் அவசியத்தைச் சொல்வதுடன், யார் யாருக்கு மரம் வளர்க்க விருப்பம் இருக்கிறதோ அவர்கள் பெயர், அலைபேசி எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டு, மறுநாளே மரக்கன்றுகளுடன் அவர்கள் வீடு தேடிச்சென்று கொடுத்துவிட்டு வருகிறார் ஏழுமலை.

தண்ணீர் இயற்கையின் பொதுநிலை. அதை வர்த்தகமாக்குவது இயற்கைப் படுகொலை. மழை நீரைச் சேமிப்பதால் மட்டும் நம் கடமை முடிந்து விடுவதில்லை. நீரை விரயம் செய்யாமல் இருப்பதும் நம் கடமையே. ம‌லையில் பிற‌ந்து, ந‌தியில் ஓடி, க‌ட‌லில் ச‌ங்க‌மிக்கும் தண்ணீர் ம‌னித‌ர்க‌ளின் உண‌ர்வுக‌ளில் விரைவில் ச‌ங்க‌மிக்கும் என நம்புவோம். வான் பொய்த்தாலும் தான் பொய்க்கா, வ‌ற்றா நம் அன்னை காவிரியை வாழ‌வைக்கும் வ‌ர‌ம் யார் கையில் உள்ளது! நீரின்றி உலகு அமையாது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.