2018-04-09 16:21:00

இந்தியாவில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்


ஏப்.09,2018. இந்தியாவின் சமூக மற்றும் மத நல்லிணக்க வாழ்வைப் பாதுகாப்பதற்கும், வன்முறைகளை வன்மையாக கண்டிப்பதற்கும் அவசரத் தேவை உள்ளது என்று, இந்திய முக்கிய மதங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

கிறிஸ்தவ, இந்து, புத்த, இஸ்லாம் உள்ளிட்ட இந்தியாவின் ஆறு முக்கிய மதங்களின் ஆன்மீகத் தலைவர்கள் இணைந்து அண்மையில் கோவாவில் கூடி, பீகார், மேற்கு வங்காளம், இராஜஸ்தான், ஒடிசா மற்றும் ஏனைய சில மாநிலங்களில் இடம்பெறும் மத வன்முறைகள் குறித்து விவாதித்த பின்னர், வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இந்தியர்கள் ஒவ்வொருவரும் சகோதரர், சகோதரிகளாக வாழும் உணர்வைப் பெறும்போதும், பகைமை உணர்வுகள் அகற்றப்பட்டு, அன்பும் அமைதியும் குடிகொள்ளும்போதும் மட்டுமே, நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும் எனக் கூறும் இந்திய மதத் தலைவர்கள், மத நம்பிக்கைகளின் அடிப்படையில், ஒருவரை தேச விரோதி என முத்திரை குத்துவது குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

கோவில்கள், கல்வி நிலையங்கள் போன்றவை தாக்கப்பட்டு வருவது குறித்தும் கண்டனத்தை வெளியிட்டுள்ள மதத் தலைவர்கள், தலித் மக்கள், பழங்குடியினர், பணியாளர்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகள் காக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.