2018-04-06 15:34:00

கொரியாவின் Jeju கிளர்ச்சியின் நினைவுக்கு திருத்தந்தை செய்தி


ஏப்.06,2018. கொரியாவின் Jeju தீவில் கம்யூனிசவாதிகளால் ஏற்பட்ட கிளர்ச்சி மற்றும், படுகொலைகள் இடம்பெற்றதன் எழுபதாம் ஆண்டு நினைவு நிகழ்வுக்கு, குணப்படுத்தலும், ஒப்புரவும் நிறைந்த செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொரிய மக்கள், நம்பிக்கையில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு, அமைதியின் அரசியாகிய அன்னை மரியிடம், அவர்களுக்காகச் செபிப்பதாகவும், அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கொரிய ஆயர் பேரவைக்கு அனுப்பியுள்ளார்.

திருத்தந்தையின் இச்செய்தி குறித்து, யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்த, கொரிய ஆயர் பேரவையின் அதிகாரி ஒருவர், திருத்தந்தை, கொரியத் திருஅவை மீது கொண்டிருக்கும் அக்கறையை, இது காட்டுகின்றது என்று தெரிவித்தார்.

Jeju கிளர்ச்சி இடம்பெற்றதன் எழுபதாம் ஆண்டை நினைவுகூரும்விதமாக, கொரிய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் ஒப்புரவு பணிக்குழுவும், Jeju மறைமாவட்டமும் இணைந்து, ஏப்ரல் ஒன்றாந்தேதி முதல், ஏழாம் தேதி வரை, ஒரு வார நிகழ்வை நடத்தி வருகின்றன.

கொரிய தீபகற்பத்தின் பிரிவினைக்குப் பின்னர், கொரியாவின் தென் பகுதியிலுள்ள Jeju தீவில், 1948ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட கிளர்ச்சியில், 10,244 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும், 3,500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

கொரியா, ஜப்பானின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த பின்னர், இடம்பெற்ற கொரியக் கருத்தியல் கோட்பாட்டுப் பிரிவினையும் இக்கிளர்ச்சிக்கு ஒரு காரணம். இக்கிளர்ச்சி, 1954ம் ஆண்டுவரை நீடித்தது. 

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.