2018-04-06 15:26:00

கல்தேய மறைசாட்சிகள், அமைதி மற்றும் ஒன்றிப்பின் ஊற்று


ஏப்.06,2018. நம் வாழ்வை, நம்பிக்கை, மனித மாண்பு, சகிப்புத்தன்மை, மற்றும் அமைதியில் நிறைப்பதற்குரிய ஆன்மீக விழுமியங்களை வழங்கும் தூண்டுதலின் ஊற்றாக,  ஈராக் மறைசாட்சிகளின் இரத்தம் விளங்குகின்றது என்று, பாக்தாத் முதுபெரும்தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

ஏப்ரல் 06, இவ்வெள்ளிக்கிழமை சிறப்பிக்கப்பட்ட கல்தேய மறைசாட்சிகள் நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள், அனைத்து விதமான பயங்கரவாதச் செயல்களை ஒழித்து, நிலையான ஒரு நாட்டை உருவாக்குவதற்கு மறைசாட்சிகளின் இரத்தம் நம்பிக்கை அளிக்கின்றது எனவும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களின் இருப்பைக் காத்து, அப்பகுதியிலிருந்து இருளை விரட்டுவதே, கிறிஸ்தவ மறைசாட்சிகளின் நோக்கம் என்றும், Mar Shimon Barssaba’i மற்றும் அவரோடு சேர்ந்தவர்கள் தொடங்கி, கல்தேய வழிபாட்டுமுறையில் தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் இரத்தம் சிந்தி வருகின்றனர் என்றும், முதுபெரும்தந்தையின் செய்தி கூறுகின்றது. 

1915ம் ஆண்டில் இடம்பெற்ற மறக்க முடியாத படுகொலைகள் பற்றியும், 2008ம் ஆண்டில் பேராயர் Faraj Rahho, அருள்பணி Ragheed Kenny மற்றும் அவரோடு இருந்தவர்கள், அல் கெய்தா தீவிரவாதிகளால் கொலையுண்டது பற்றியும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ள முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள், சண்டையில் அழிக்கப்பட்ட கிராமங்களும், நகரங்களும் விரைவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார்.

கல்தேய மறைசாட்சிகள் நாள், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.