2018-04-06 14:59:00

இஸ்பெயினின் இருபால் துறவியருக்கு திருத்தந்தை செய்தி


ஏப்.06,2018. இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில், அந்நாட்டின் இருபால் துறவியர் பங்குபெற்றுவரும், தேசிய கூட்டத்திற்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துறவிகள், தேர்தல் மற்றும், விளம்பர பிரச்சாரங்களைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில், கடவுள், சந்தை விளம்பரங்கள் வழியாகப் பணியாற்ற நம்மை அழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மத்ரித் இறையியல் நிறுவனத்தின் தலைவர் அருள்பணி கார்லோஸ் மார்ட்டினெஸ் ஒலிவெராஸ் அவர்களுக்கு, இக்காணொளிச் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, இக்காலத்தில் இஸ்பெயினில் இறையழைத்தல் குறைந்துவருவதைக் கவனத்தில் கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்மை குறைபட்டுக் கொள்வதிலேயே நின்றுவிடாமல், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னோக்கிப் பார்க்க வேண்டுமென ஆண்டவர் நம்மிடம் கூறுகிறார் என்றும், இஸ்பெயின் துறவியர் துணிச்சலுடன் செயல்பட்டு, இளையோர் தங்களின் வேர்களைக் கண்டுகொள்ள உதவ வேண்டுமென்றும், திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.   

இளையோரின் இறையழைத்தலைத் தேர்ந்து தெளிதல் என்ற தலைப்பில், மார்ச் 05, இவ்வியாழனன்று ஆரம்பித்த இந்தக் கூட்டம், ஏப்ரல் 08, வருகிற ஞாயிறன்று நிறைவடையும். இக்கூட்டத்தில், கர்தினால்கள், Carlos Osoro Sierra, Oscar Rodrìguez Maradiaga, திருப்பீட துறவியர் பேராயச் செயலர் பேராயர், José Rodrìguez Carballo, Taizé கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுமத்தின் தலைவர், அருள்சகோதரர் Alois ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.