2018-04-03 13:57:00

இமயமாகும் இளமை – "நான் மலையுச்சிக்குச் சென்றிருக்கிறேன்"


சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், 1968ம் ஆண்டு, ஏப்ரல் 4ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் மெம்பிஸ் (Memphis) என்ற நகரில், மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார். 1929ம் ஆண்டு, சனவரி 15ம் தேதி பிறந்த மார்ட்டின் அவர்கள், தன் 39வது வயதில் கொலையுண்டார். கறுப்பின மக்கள் சம உரிமைகள் பெறுவதற்காக தன் 26வது வயது முதல் போராடியவர், மார்ட்டின். காந்தியடிகளின் சத்தியாகிரக நெறிமுறைகள் இவரைப் பெரிதும் கவர்ந்ததால், வன்முறையற்ற ஒத்துழையாமை இயக்கத்தின் வழியே தன் போராட்டங்களை மேற்கொண்டார். வெற்றியும் கண்டார். அவரது போராட்டம், சக்தி மிகுந்த ஓர் இயக்கமாக மாறியதால், அவருக்கு பல கொலை மிரட்டல்கள் வந்தன. எனினும், அவர் தன் போராட்டங்களைத் தொடர்ந்தார்.

1968ம் ஆண்டு, மார்ச் மாதம், மெம்பிஸ் நகரில், கறுப்பினத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தருவதற்காக, அந்நகருக்குப் புறப்பட்டார் மார்ட்டின். அவர் செல்லவிருந்த விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக பொய்யான வதந்தி எழுந்தது. எனவே, அவரது பயணம் தாமதமானது. தன் உயிருக்கு பல வழிகளிலும் ஆபத்து அதிகரித்து வருகிறது என்பதை உணர்ந்த மார்ட்டின் அவர்கள், ஏப்ரல் 3ம் தேதி மெம்பிஸ் நகரில் வழங்கிய உரை, அவரது உள்ளத்துணிவை உணர்த்தியது. "நான் மலையுச்சிக்குச் சென்றிருக்கிறேன்" ("I've Been to the Mountaintop") என்ற பெயரில் அவர் வழங்கிய அந்த உரையின் ஒரு பகுதி இதோ:

"மனநோய் கொண்டிருக்கும் நம் வெள்ளையின சகோதரர்களால் எனக்கு எந்நேரத்திலும் ஆபத்து வரலாம். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் நான் மலையுச்சிக்குச் சென்றிருக்கிறேன். மற்றவர்களைப்போல் நானும் நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புகிறேன். ஆனால், இப்போது அதைப்பற்றி கவலையில்லை. கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவது ஒன்றே என் குறிக்கோள். அவர் என்னை மலையுச்சிக்கு அழைத்துச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டை கண்டுவிட்டேன். அங்கு நான் உங்களுடன் செல்வேனா என்று தெரியவில்லை. ஆனால், நாம் அனைவரும் வாக்களிக்கப்பட்ட நாட்டில் நுழைவோம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். இப்போது, நான் எந்த மனிதரைப் பற்றியும் அஞ்சவில்லை. என் கண்கள் இறைவனின் மகிமையைக் கண்டுவிட்டன."

இதுவே, மார்ட்டின் அவர்கள் வழங்கிய இறுதி உரை. இந்த உரை வழங்கிய மறுநாள், ஏப்ரல் 4ம் தேதி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.