2018-04-02 15:35:00

வறுமைப் பிடியிலிருந்து காங்கோவை மீட்க, இளையோருக்கு அழைப்பு


ஏப்.02,2018. காங்கோ நாட்டை ஏழ்மையின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டுவர, இளையோரின் விடா முயற்சி தேவைப்படுகின்றது எனக் கூறினார், அந்நாட்டு கர்தினால், Laurent Monsegwo Pasinya.

காங்கோ நாட்டின் நிகழ்காலமாகவும், வருங்காலமாகவும் இருக்கும் இளையோர், ஆட்டு மந்தைகள்போல், காரணம் தெரியாமல், மற்றவர்களை, கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விடுத்து, நாட்டு நலனில் அக்கறை கொண்டு செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார் கர்தினால் Monsegwo.

நாட்டின் வருங்காலத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் இன்றைய இளையோர், காங்கோவின் இன்றைய நிலைகளுக்கு, முதியோர்களையும் அரசியல்வாதிகளையும் குறைகூறும் உரிமையைக் கொண்டிருப்பினும், வளைந்து நெளிந்த பாதைகளைச் சீரமைக்க இளையோரின் திட்டம் என்ன என்ற கேள்வியையும் முன்வைத்த கர்தினால் Monsegwo அவர்கள், நாட்டில் எழுந்துள்ள அரசியல் குழப்ப நிலைகள், இளையோரின் ஆழமான ஈடுபாட்டிற்கு அழைப்பு விடுப்பதாக உள்ளன எனவும் கூறினார்.

மற்றவர்கள் நாட்டை சீரமைப்பர், தாங்கள் அதன் கனிகளை அறுவடைச்செய்யலாம் என்ற எண்ணத்தில், ஐரோப்பாவிலும், ஏனைய பணக்கார நாடுகளிலும் காத்திருக்கும் காங்கோ நாட்டு கல்வியாளர்கள், மற்றும் தொழில் வல்லுனர்கள் குறித்தும் தன் கவலையை வெளியிட்டார் கர்தினால் Monsegwo.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.