2018-04-02 15:20:00

அமைதி ஊர்வல பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம்


ஏப்.02,2018. பாலஸ்தீன, இஸ்ரேல் எல்லையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது, WCC எனும் உலக கிறிஸ்த சபைகளின் அவை.

காசா எலையில் இஸ்ரேல் இராணுவம் தாக்கியதில், 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டது, மற்றும், 1400 பேர் காயமடைந்துள்ளது குறித்து, கவலையை வெளியிட்ட இக்கிறிஸ்தவ அவை, கடந்த சனிக்கிழமையை, இத்தாக்குதலில் இறந்தவர்களுக்கான துக்க நாளாக பாலஸ்தீனியர்கள், கடைப்பிடித்ததையும் சுட்டிக்காட்டியது.

1976ம் ஆண்டு இஸ்ரேல் அரசால் கைப்பற்றப்பட்ட தங்கள் வீடுகளும் நிலங்களும் தங்களுக்கு தரப்படவேண்டும் என பாலஸ்தீனியர்கள் காசா எல்லையில் நடத்திய அமைதிப் போராட்டத்தின்போது இஸ்ரேல் இராணுவம் தாக்கியதில் உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. 

இத்தாக்குதல்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து தன் கவலையை வெளியிட்ட WCC அவையின் தலைவர், கிறிஸ்தவப் போதகர் Olav Fykse Tveit அவர்கள், மக்களின் கருத்து சுதந்திரத்தையும், நீதியான அமைதியை பெறுவதற்கான உரிமையையும் மதித்து, மனித உரிமைகளுக்கு உறுதி வழங்கவேண்டிய இஸ்ரேல் அரசின் கடமையை வலியுறுத்தினார்.

காசா பகுதியில் இஸ்ரேல் அரசால் விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்படுவதற்கு அனைத்துலக சமூகம் உழைக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் கிறிஸ்தவ போதகர் Olav Fykse Tveit.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.