2018-04-01 14:07:00

உயிர்ப்புப் பெருவிழா- திருத்தந்தையின் ஊர்பி எத் ஓர்பி செய்தி


ஏப்.01,2018. அன்பு சகோதர, சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள். இயேசு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்! இந்தச் செய்தி, “இயேசுவே ஆண்டவர். இறைத்தந்தை அவரை உயர்த்தியுள்ளார் மற்றும், அவர் நம் மத்தியில் என்றென்றும் வாழ்கிறார்” என்ற அல்லேலூயா வாழ்த்துப் பாடலுடன், திருஅவையெங்கும் எதிரொலிக்கின்றது.

கோதுமை மணியின் உருவகத்தைப் பயன்படுத்தி, இயேசு தம் மரணத்தையும், உயிர்ப்பையும் நமக்கு முன்னறிவித்தார். “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” (யோவா.12,24) என இயேசு சொன்னார். இதுவே நடைபெற்றுள்ளது. இறைவனால் இப்பூமியின் உழவுகால்களில் விதைக்கப்பட்ட கோதுமை மணியாகிய இயேசு, இறந்தார், உலகின் பாவத்தால் கொல்லப்பட்டார். கல்லறையில் இரு நாள்கள் இருந்தார். ஆயினும், தம் அனைத்து வல்லமையிலும் இறைவனின் அன்பில் இருந்த அவரின் மரணம், மூன்றாம் நாளில் வெளியானது. ஆண்டவராம் கிறிஸ்துவின் உயிர்ப்பாகிய அந்த நாளை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

கிறிஸ்துவின் உயிர்ப்பு, ஏமாற்றாத, உலகின் உண்மையான நம்பிக்கை என, கிறிஸ்தவர்களாகிய நாம் நம்புகின்றோம் மற்றும் அறிந்துள்ளோம். அது, கோதுமை மணியின் வல்லமை, அந்த அன்பின் வல்லமை, தன்னையே தாழ்த்துகின்றது மற்றும், உலகின் முடிவுவரை தன்னையே அளிக்கின்றது. இவ்வாறு, அந்த வல்லமை, உலகை, உண்மையிலேயே புதுப்பிக்கின்றது. ஏராளமான அநீதி மற்றும், வன்முறைச் செயல்களால் குறிக்கப்பட்ட நம் வரலாற்றின் ஏர்நிலங்களில், இன்றும் தொடர்ந்து கனி கொடுத்து வருகின்றது. ஒதுக்கப்படுதலும், தனிமைப்படுத்தப்படுதலும், பசியும் வேலைவாய்ப்பின்மையும், புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும், போதைப்பொருள் வர்த்தகம், மனித வர்த்தகம் மற்றும், அடிமைநிலையின் தற்போதைய வடிவங்கள் போன்றவை இருக்கின்ற இடங்களில், இந்த வல்லமை, நம்பிக்கை மற்றும் மாண்பின் கனிகளை வழங்குகின்றது. புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும், இக்காலத்திய வீணாகும் கலாச்சாரத்தால் அடிக்கடி புறக்கணிக்கப்படுகின்றனர்.

நீண்ட காலமாக துன்புறும் அன்புமிக்க சிரியா நாடு தொடங்கி, உலகமனைத்திற்கும் அமைதியின் கனிகளுக்காக, இன்று செபிக்கின்றோம். சிரியா நாட்டு மக்கள்,   முடிவில்லாத போரினால் சிதைந்து போயுள்ளனர். இந்த உயிர்ப்புப் பெருவிழா, உயிர்த்த கிறிஸ்துவின் ஒளி, அனைத்து அரசியல் மற்றும், இராணுவத் தலைவர்களின் மனச்சாட்சிகளை ஒளிரச் செய்வதாக. இதனால், தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர் விரைவில் முடிவுக்குவரும். மனிதாபிமானச் சட்டம் மதிக்கப்படும். உடனடியாக உதவி தேவைப்படும் நம் சகோதர, சகோதரிகளுக்கு உதவிகள் கிடைப்பதற்கு வழி அமைக்கப்படும். அதேநேரம், புலம்பெயர்ந்தவர்கள், நாடு திரும்புவதற்கு, சரியான நிலைகள் உருவாக்கப்படும்.

புனித பூமியின் ஒப்புரவின் கனிகளுக்காகவும் நாம் இறைஞ்சுகின்றோம். இந்நாள்களில், பாதுகாப்பற்ற மக்களை விட்டுவைக்காமல், தொடர்ந்து போர் இடம்பெற்றுவரும் ஏமன் நாட்டிற்கும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதிற்கும், ஒப்புரவின் கனிகளுக்காகச் செபிக்கின்றோம். இதனால், உரையாடலும், ஒருவரையொருவர் மதித்தலும் இடம்பெற்று, பிரிவினையும் வன்முறையும் அகற்றப்படும். அநீதிகளுக்கும், சித்ரவதைகளுக்கும் அடிக்கடி உள்ளாக்கப்படும் கிறிஸ்துவில் நம் சகோதரர்கள், சகோதரிகள், உயிர்த்த ஆண்டவருக்கும், நன்மை, தீமையை வெற்றிகொள்ளும் என்பதற்கும், சுடர்விடும் சான்றுகளாய் இருப்பார்களாக.

எல்லாவற்றிக்கும் மேலாக, மாண்புடைய வாழ்வுக்காக ஏங்குகின்ற, ஆப்ரிக்கக் கண்டத்தில், பசியாலும், ஆண்டு முழுவதும் இடம்பெறும் மோதல்களாலும் பயங்கரவாதத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் மக்களுக்கு, நம்பிக்கையின் கனிகள் கிடைக்க வேண்டுமென்று, இந்நாளில் நாம் வேண்டுகின்றோம். உயிர்த்த ஆண்டவரின் அமைதி, தென் சூடானின் காயங்களைக் குணமாக்கி, உரையாடல் வழியே, ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கு இதயங்களைத் திறப்பதாக. மோதல்களில் பலியாகும் சிறாரை மறவாதிருப்போம். தங்கள் வாழ்விடங்களை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, அத்தியாவசியத் தேவைகள் இன்றி இருப்போருக்கு ஒருமைப்பாட்டுணர்வு குறைவின்றி கிடைப்பதாக.

கொரியத் தீபகற்பத்தில் உரையாடலின் கனிகளுக்காகச் செபிக்கின்றோம். தற்போது இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்கள், அப்பகுதியில் நல்லிணக்கமும் அமைதியும் நிலவுவதற்கு உதவுவதாக. இதற்கு நேரிடையாகப் பொறுப்பானவர்கள், கொரிய மக்களின் நலனை ஊக்குவிப்பதற்கு, ஞானத்தோடும், தேர்ந்து தெளிதலோடும், செயல்படுவார்களாக. உலகளாவிய சமுதாயத்தில் நம்பிக்கை உறவுகளைக் கட்டியெழுப்புவார்களாக.

உக்ரேய்ன் நாட்டில் அமைதியின் கனிகளும், வெனெசுவேலா மக்களுக்கு, ஆறுதலின் கனிகளும் கிடைப்பதற்காகவும் மன்றாடுகின்றோம். சொந்த நாட்டில் அந்நியர் போல் வாழ்வதாக, வெனெசுவேலா ஆயர்கள் எழுதியிருக்கின்றனர். அந்நாட்டைச் சூழ்ந்துள்ள அரசியல் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் விரைவில் களையப்பட்டு, நீதி, அமைதி மற்றும் மனிதம் நிறைந்த வழிகள் காணப்பட, உயிர்த்த இயேசுவின் வல்லமைக்காகச் செபிக்கின்றோம்.

போர்கள் மற்றும் பசியால் வாடுகின்ற சிறாருக்கு, நம்பிக்கையின்றி, கல்வி வசதி மற்றும் நலவாழ்வு வசதியின்றி உள்ள சிறாருக்கு, உயிர்த்த கிறிஸ்து, புதுவாழ்வை அளிப்பாராக. தன்னலக் கலாச்சாரத்தால் ஒதுக்கப்படும் வயது முதிர்ந்தவர்களுக்காகவும் செபிக்கின்றோம்.

நம் உலகில் அரசியலுக்குப் பொறுப்பானவர்கள், எப்போதும் மனித மாண்பை மதித்து, பொதுநலனுக்குத் தங்களை அர்ப்பணித்து, தங்கள் குடிமக்களுக்கு வளர்ச்சியும் பாதுகாப்பும் தருபவர்களாக வாழ, அவர்கள் ஞானத்தின் கனிகளைப் பெறுவதற்காகச் செபிப்போம்.

உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? (லூக்.24,5-6) என, கல்லறையில் பெண்கள் கேட்ட வார்த்தைகள், நம்மிடமும் சொல்லப்படுகின்றன. மரணம், தனிமை, அச்சம் ஆகியவை கடைசி வார்த்தைகள் அல்ல. அவற்றையும் கடந்த, கடவுள் மட்டுமே பேசக்கூடிய ஒரு சொல் உள்ளது. அதுவே உயிர்ப்பு. கடவுளின் அன்பின் வல்லமையால், அது தீமைகளை அகற்றுகின்றது, தவறுகளைக் கழுவுகின்றது, கண்ணீர் சிந்துவோருக்கு மகிழ்வைத் தருகின்றது. வெறுப்பை விரட்டுகின்றது. நல்லிணக்கத்தை வளர்க்கின்றது. வலியோரைத் தாழ்த்துகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.